‘குடும்பத்திற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ – விமர்சிக்கப்படும் விராட் கோலிக்கு டேல் ஸ்டெய்ன் ஆதரவு
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஓய்வில் இருக்கும் நிலையில், அவர் மீது இந்திய அணிக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கோலிக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2 ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் 3 ஆவது போட்டி வரும் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தற்போது சுமார் 10 நாட்கள் ஓய்வில் இரு அணி வீரர்களும் இருக்கின்றனர். இதற்கிடையே நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் விளையாடாமல் உள்ளார். அவர் தனது 2 ஆவது குழந்தைக்கு தந்தையாக போவதால், ஓய்வில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
தேசிய அணியில் விளையாடுவதை விட தனிப்பட்ட நலனுக்கு விராட் கோலி முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு சிலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலையில், விராட் கோலிக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது-
என்னை பொருத்தளவில் குடும்பத்திற்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதை சொல்வதற்கு நான் வருத்தம் கூறிக் கொள்கிறேன். ஆனால் முடிவில் நீங்கள் உங்கள் குடும்பத்தை தான் கவனிக்க வேண்டும்.
என்னிடம் 3 நாய்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஐபிஎல் தொடரில் இருந்த நான், அடுத்த விமானத்தை பிடித்து என் நாயை பார்க்க சென்றேன். அதேபோன்றுதான், விராட் கோலி ஓய்வில் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதில் எந்த பிரச்னையும் கிடையாது.
இந்திய அணிக்காக பல ஆண்டுகள் கோலி விளையாடி வருகிறார். உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்துள்ளார். கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார். இதற்கு மேல் அவர் தன்னை கிரிக்கெட் உலகில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார்.