பிரபல நடிகை அருந்ததி நாயர் சாலை விபத்தில் சிக்கினார்…ஐசியூவில் அனுமதி!
2015-ல் வெளியான ‘பொங்கி எழு மனோகரா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருந்ததி நாயர். அதனைத் தொடர்ந்து ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பின், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனிடையே 2018-ல் வெளியான ‘ஒட்டக்கொரு கமுகன்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானர்.
தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வரும் இவர், திருவனந்தபுரம் கோவளம் அருகே சாலை விபத்தில் சிக்கினார். தனது சகோதரருடன் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து விட்டு, திருவனந்தபுரம் கோவளம் அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது வாகனம் ஒன்று மோதி விட்டு, நிற்காமல் சென்றது.
இந்த விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அருந்ததி நாயரும், அவரது சகோதரரும் மீட்கப்பட்டனர். அது வரையில் விபத்து குறித்து யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில், சமூக வலைதளங்களில் நடிகை அருந்ததிக்கு மருத்துவ உதவி வழங்குமாறு தொலைக்காட்சி நடிகை கோபிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள கோபிகா, “வென்டிலேட்டரில் உயிருக்கு போராடும் அருந்ததி, தினசரி மருத்துவமனை செலவுகள் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறார். நாங்கள் எங்கள் பங்கைச் செய்கிறோம். ஆனால் தற்போதைய மருத்துவமனைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை. உங்களால் முடிந்த வழியில் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அது அவரது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.