‘பெரியார்’ படத்தில் ராஜாஜியாக நடித்த பிரபல இயக்குநர் ஆர்த்தி குமார் திடீர் மரணம்..!
இயக்குனர் ஞானசேகரன் இயக்கிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமான பெரியார் படத்தில் ராஜாஜி கதாபாத்திரத்தில் நடித்தார் ஆர்த்தி குமார். சுரேஷ்குமார் என்கிற அவரது நிஜ பெயரை சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும்போது, ஆர்த்தி குமார் என மாற்றி வைத்துக் கொண்டார்.
‘சவுண்ட் பார்ட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்த்தி குமார். இந்தப் படத்தில் சத்யராஜ், மறைந்த நடிகை பிரதியுஷா, வடிவேலு, இளவரசு, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் காமெடி காட்சிகளை அவர் தான் எழுதியிருந்தார். குறிப்பாக வடிவேலுவின் வசனங்களும், காமெடி காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
இயக்குனர் ஆர்த்தி குமாருக்கு பிடித்தமான நடிகர் சத்யராஜ். அதனாலேயே, அவர் இயக்கிய படங்களில் சத்யராஜ்தான் ஹீரோவாக நடித்திருப்பார். இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அழகேசன், சவுண்டு பார்ட்டி ஆகிய படங்களை இயக்கிய மிகவும் பிரபலமானவர் இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் கதாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் இயக்கும் படங்களில் பெரும்பாலும் இவரே கதையை எழுதுவார்.
கடந்த சில வாரங்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்றிரவு உயிரிழந்திருக்கிறார்.இவர் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம் ஹைகிரவுண்ட் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ஆர்த்தி குமார் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.