பூனம் பாண்டே செயலுக்கு கொந்தளித்த ரசிகர்கள் – வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு கோரிக்கை!

இந்தி நடிகை பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வெளியிட்ட பதிவு, தற்போது அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
2013ஆம் ஆண்டு வெளியான நாஷா என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை அள்ளிக் கொண்டவர் பூனம் பாண்டே. மாடலாகவும், நடிகையாகவும் வலம் வரும் பூனம் பாண்டே அவ்வபோது இன்ஸ்டாகிராமிலும் வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கவைப்பதை வேலையாகவே வைத்திருக்கிறார். அத்துடன், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பாண்டேவின் இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரிக்க, அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் தொடரில், சொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றதால், அந்த அணியின் ரசிகையான அவர், சமுக வலை தளங்களில் நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டார்.
இதுமட்டுமல்லாமல் 2017- ஆம் ஆண்டு, பாண்டே ஆப் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அதில் இருந்த உள்ளடக்கத்தை கண்டு அலறிய கூகுள், 1 மணி நேரத்தில் பிளே ஸ்டோரிலிருந்து அந்த ஆப்-பை நீக்கியது. இப்படி சர்ச்சைகள், திரைப்படங்களைத் தாண்டி, 2022ஆம் ஆண்டு கங்கனா ரணாவத் நடத்திய லாக் அப் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்று, தனது கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை மிரளவைத்தார் பூனம் பாண்டே.. கடந்த மாதம் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடந்தபோது, அங்கு புல்லட் பைக்கில் பயணித்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளிக் கொண்டார்..
இந்த நிலையில், கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. இதற்கு மறுநாளே நடிகை பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டதாக, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிட்டிருந்தை பார்த்து பதறிப் போனார்கள் ரசிகர்கள்.. பூனம் பாண்டே மரணம் குறித்து அவரது பெற்றோர் அந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என கருதி, பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.. ஆனால், கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, தான் அப்படி ஒரு பதிவை வெளியிட்டதாகக் கூறி அதிர்ச்சி அடையவைத்துள்ளார் பூனம் பாண்டே..
மேலும், கருப்பை வாய் புற்றுநோய் குறித்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால், அதை தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார் பூனம் பாண்டே.. அத்துடன், தான் இறந்துவிட்டதாக, தவறான தகவலை பதிவிட்டதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார் அவர்..
இதையடுத்து, மரணம் என்ற உணர்ச்சிபூர்வமான விவகாரத்தில் அவர் விளையாடுவதாகக் கூறி, பூனம் பாண்டேவுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.. இதனிடையே, அவர் விழிப்புணர்வுக்காக இவ்வாறு செய்யவில்லை என்றும், பணம் சம்பாதிக்கவும், வெறும் லைக்குகளை பெறுவதற்காகவும் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர் இந்தி திரையுலக பிரபலங்கள்..
மேலும், தவறான தகவலை தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், அவர் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.