Fastag: கார்ல போறவங்க கவனத்துக்கு; இனிமே Paytm வேலட்டில் டாப்அப் பண்ணாதீங்க! – ஏன் தெரியுமா?

இனிமேல் ஒவ்வொரு டோல்கேட் என்ட்ரன்ஸ்களிலும் ‛பேடிஎம்’ பேனர் வைத்து, குடை பிடித்துக்கொண்டு வெயிலில் காய்ந்தபடி, ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கும் பணியாளர்களைப் பார்க்க முடியாது. அட ஆமாங்க! இனிமேல் Paytm வழியாக டோல்கேட்களில் பணம் செலுத்துவது செல்லாது என்று அறிவித்துவிட்டது RBI (Reserve Bank of India). அதனால், ஃபாஸ்ட்டேக் ப்ரொவைடர்களுக்கான லிஸ்ட்டில் இருந்து பேடிஎம் ஆப்பைத் தூக்கிவிட்டது National Highway Authority of India (NHAI).

காரில் ஊருக்குப் போகணும் என்று அவசரம் அவசரமாக பேடிஎம் வேலட்டில் Fastag ஏரியாவில் பணம் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், கொஞ்சம் நிறுத்துங்கள். Paytm ஆப்பின் வேலட் வழியாக டோல்கேட்களில் பணம் செலுத்திக் கொண்டிருப்பவர்களின் கவனத்துக்குத்தான் இந்த ஷார்ட் நியூஸ்!

தன் செயல்பாடுகளை நிறுத்துமாறு Paytm Payments Bank-ஐ இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கேட்டுக் கொண்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதி முதல், Paytm இன் கூட்டாளியான Paytm Payments வங்கி, அதன் கணக்கில் மற்றும் வாலட்டில் புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு ஜனவரி மாதம் மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்தக் காலக்கெடு இப்போது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டோல்கேட் பரிவர்த்தனைகளைக் கவனித்து வரும் Indian Highways Management Company Ltd (IHMCL), பொதுமக்களுக்கு Paytm ஆப் கணக்கை நிறுத்தச் சொல்லிவிட்டு, 32 வங்கிகளின் லிஸ்ட்டைக் கொடுத்து, அதில் டாப்அப் செய்யச் சொல்லி அறிவுறுத்தி வருகிறது. இந்த லிஸ்ட்டில் எஸ்பிஐ, கனரா, பேங்க் ஆஃப் பரோடா போன்ற நேஷனலைஸ்டு பேங்க்குகளில் இருந்து ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகள் வரை ஏகப்பட்டவை அடக்கம். இந்த ஆப்களை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்துகொண்டு, KYC நிரப்பி, அந்தந்த வங்கிகளின் ஆப்களின் வேலட்டில் பணத்தை டெப்பாசிட் செய்து, டோல்கேட்டுக்குப் பணம் கட்ட வேண்டும்.

‘One Vehicle, One Fastag’ எனும் திட்டத்தின்படி, ஒரு வாகனத்துக்கு ஒரு ஃபாஸ்ட்டேக்தான் இருக்க வேண்டும். சிலர் புத்திசாலித்தனமாக ஒரு காருக்கு 2 Fastag அக்கவுன்ட் பயன்படுத்துவார்கள். அதுவும் செல்லாது. அதன்படி நீங்கள் ஏதாவது ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதன் மூலம் மட்டும் பணம் கட்டிப் பயணிக்கலாம். அதேபோல், புதிய கணக்குக்கு KYC ப்ராசஸ் செய்ய வேண்டும் என்றால், பழைய பேடிஎம் ஆப் கணக்கு இருந்தால், அதை De-activate செய்தால்தான் புது KYC ப்ராசஸ் நடைபெறும்.

பழைய ஆப்பில் இருந்து டீ-ஆக்டிவேட் செய்வது எப்படி?

. Paytm ஆப்பைத் திறந்து, அதில் உங்கள் ப்ரொஃபைலை க்ளிக் செய்யுங்கள்.

. Help and Support ஏரியாவில் சென்று, Banking Services and Payments-ல் உள்ள Fastag எனும் ஆப்ஷனை செலெக்ட் செய்யுங்கள்.

. அங்கே Deactivation வேண்டுகோளை நிரப்பி காரியத்தை முடிக்கலாம். Chat ஆப்ஷனிலும் சாட் செய்தபடி டீ-ஆக்டிவேட்டும் செய்து கொள்ளலாம்.

புது Fastag அக்கவுன்ட் திறப்பது எப்படி?

. National Highway Authority of India (NHAI) ஆப்பில் சென்று, அந்த 32 வங்கிகளில் உங்களுக்குத் தேவையான வங்கியைத் தேர்ந்தெடுத்து, வெப்சைட் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது உங்கள் மொபைல் போனில் இருந்து ஆண்ட்ராய்டு என்றால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும், ஐபோன் என்றால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும் `My Fastag’ எனும் ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளவும்.

. Buy Fastag எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

. Amazon அல்லது Flipkart லிங்க் ஒன்று பாப்அப் ஆகும். அங்கு தெரியும் QR கோடை ஸ்கேன் செய்து, அது சொல்லும் இன்ஸ்ட்ரக்ஷன்களைப் பின் தொடர்ந்தும் வாங்கிக் கொள்ளலாம்.

‛திடுதிப்புனு இப்படி அனவுன்ஸ் பண்ணா எப்படிங்க’ என்பவர்களுக்காக, இந்த பேடிஎம் ஆப் மூலம் ஃபாஸ்டேக்கில் டோல்கேட்டுக்குப் பணம் செலுத்துவதை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள். மார்ச் 15, 2024 கெடுவுக்குப் பிறகும் வேலை செய்வதற்காக Paytm ஆப், ஆக்சிஸ் வங்கிக்குத் தனது Nodal Accountகளை ஷிஃப்ட் செய்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இருந்தாலும், வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் உங்கள் Paytm ஆப்பில் Fastag-க்கான வேலட்டில் பணம் இருந்தால், அதைக் காலி செய்து விடுங்கள். காரணம், அதில் மிச்ச சொச்சப் பணம் இருந்தால், புது அக்கவுன்ட்டுக்கு அதை அப்படியே மாற்றிப் பயன்படுத்த முடியாது என்பதையும் கவனிக்க!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *