டி20 வரலாற்றிலேயே அதிவேக சதம்.. ரோஹித் சர்மா ரெக்கார்டை எல்லாம் உடைத்து எறிந்த நமீபியா வீரர்
கிர்த்திபூர் : சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்து முந்தைய சாதனைகளை எல்லாம் உடைத்து எறிந்து இருக்கிறார் நமீபியா வீரர் ஜான் நிக்கோல் லோப்டி ஈட்டன். வெறும் 33 பந்துகளில் சதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் ஈட்டன்.
நேபாள நாட்டில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது நமீபியா அணி. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி முதல் 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது, 11வது ஓவரில் 3 விக்கெட்கள் இழந்த நிலையில் களத்துக்கு வந்தார் ஈட்டன்.
அதன் பின் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி மழை பொழிந்த ஈட்டன் 11 ஃபோர், 8 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார். 33 பந்துகளில் சதம் அடித்தார். அதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
இதற்கு முன்பு சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த பட்டியலில் நேபாள நாட்டின் குஷால் மல்லா 34 பந்துகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து டேவிட் மில்லர் மற்றும் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் டேவிட் மில்லர், ரோஹித் சர்மா ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்து இருக்கிறார் ஈட்டன். அவர் 20 ஓவர்களின் முடிவில் 36 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து இருந்தார். அவரது அதிரடியால் 206 ரன்கள் குவித்தது நமீபியா. அடுத்து ஆடிய நேபாள அணி 18.5 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நேபாளம் மற்றும் நமீபியா அணிகள் அதற்கான முன்னோட்டமாகவே இந்த தொடரில் பங்கேற்று உள்ளன. எனவே, இந்த அதிரடி சாதனை நமீபியா அணிக்கு உலகக்கோப்பை தொடருக்கான ஊக்கமாக இருக்கும்.