`அப்பா ஆனந்த விகடன் வாசகர்; நான் ஸ்போர்ட்ஸ் விகடன் வாசகர்!’ – நெகிழும் ஐஃபோன் வின்னர் அனுஜித்
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையிலான கிரிக்கெட் சீசனில் ஸ்போர்ட்ஸ் விகடன் தளத்தில் சத்யா வழங்கிய ‘சிக்சர் அடி ஐஃபோன் ரெடி’ என்கிற கிரிக்கெட் சார்ந்த வினாடி வினா போட்டியை நடத்தியிருந்தோம்.
தினசரி கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தொடர்ந்து சரியாக பதிலளித்து வந்த வாசகர்களில் முதல் 3 பேரை வெற்றியாளர்களாக அறிவித்திருந்தோம். அவர்களுக்கான பரிசுப்பொருள்களை வழங்கும் நிகழ்வு இன்று தியாகராய நகரில் அமைந்திருக்கும் சத்யா ஷோ ரூமில் நடந்திருந்தது. சத்யா ஏஜென்ஸியின் இயக்குனர் ஜாக்சன் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்திருந்தார்.
சத்யா ஏஜென்ஸியின் இயக்குனர் ஜாக்சன் பேசுகையில், ‘ஸ்போர்ட்ஸ் விகடனுடன் இணைந்து இப்படி ஒரு நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி. தொடக்கத்தில் ஒரே ஒரு வெற்றியாளரை மட்டுமே தேர்வு செய்து ஐஃபோனை பரிசாக வழங்க நினைத்தோம். ஆனால், வாசகர்களின் ஆதரவும் பங்கேற்பும் நாளுக்கு நாள் அதிகரிக்க அதிகரிக்க இரண்டாம் பரிசாக எல்.இ.டி டிவியையும் மூன்றாம் பரிசாக சவுண்ட் சிஸ்டமையும் வழங்க தீர்மானித்தோம். இந்த கிரிக்கெட் சீசனில் சத்யாவும் ஸ்போர்ஸ் விகடனும் இணைந்து செய்த நிகழ்ச்சிகள் அத்தனையும் லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்திருந்தது. சத்யா சார்பில் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை வழங்கவிருக்கிறோம். இளைஞர்களை கவரும் வகையில் சத்யா மொபைல்ஸிலும் அதிரடியான ஆஃபர்களை கொடுக்கவிருக்கிறோம்.
பொங்கலை சத்யாவோடு கொண்டாடுங்கள். வரவிருக்கும் கிரிக்கெட் சீசன்களிலும் ஸ்போர்ட்ஸ் விகடனோடு இணைந்து பயணிக்க தயாராக இருக்கிறோம்.’ என்றார்.
தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார் இயக்குனர் ஜாக்சன். முதலிடம் பிடித்து ஐஃபோன் 13 ஐ வென்ற இளைஞர் அனுஜித், ‘எங்க ஊரு கன்னியாகுமரி. தொடர்ச்சியா ஸ்போர்ட்ஸ் விகடனை ஃபாலோ பண்ணிக்கிட்டே இருப்பேன். இப்படி ஒரு போட்டின்ன உடனே கலந்துக்கிட்டேன். அதுமட்டுமில்லாம எங்க அப்பா விகடனோட தீவிர வாசகர். 50 வருசமா விகடன விடாம படிக்கிறவரு. விகடன் சார்புல இதுக்கு முன்னாசி நடத்தப்பட்ட போட்டிகள்ல எங்க அப்பா கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்காரு. இப்ப நான் கலந்துக்கிட்டு ஐஃபோன் ஜெயிச்சதுல ரொம்ப சந்தோஷம். சத்யாவுக்கும் ரொம்ப நன்றி.’ என்றார்.
இரண்டாம் பரிசாக எல்.இ.டி டிவியை வென்ற ஜெகுரியா என்ற பெண்மணி பேசுகையில், ‘நானும் என் கணவரும்தான் ஒன்னா கிரிக்கெட் பார்ப்போம். அப்டி பார்க்குறப்ப ஜாலியா இந்த போட்டிலயும் கலந்துக்கிட்டோம். முதல்ல அந்த ரேங்கிங் டேபிள்ல எங்க பேரு பின்னாடிதான் இருந்துச்சு. அப்புறம்தான் நிறைய கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லி மேல ஏறி வந்தோம். இப்ப இந்த டிவிய ஜெயிச்சதுல ஹேப்பி. ஸ்போர்ட்ஸ் விகடனுக்கும் சத்யாவுக்கும் நன்றி.’ என்றார்.
மூன்றாம் பரிசாக சவுண்ட் சிஸ்டமை வென்ற கார்த்திகேயன் பேசுகையில், ‘பேஸ்புக்கில் ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்த போது ஸ்போர்ட் விகடன் பக்கத்தில் சிக்சர் ரெடி ஐபோன் ரெடி’ போட்டியை பற்றி படித்தேன். கிரிக்கெட் மீது ஆர்வம் உண்டு என்பதால் தொடர்ச்சியாக போட்டியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தேன்.
உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதி வரை வந்து தோற்றதில் வருத்தம்தான். ஆனால், முடிந்தவரை போராடியிருந்தார்கள். அடுத்தடுத்து நிறைய கிரிக்கெட் போட்டிகள் வரவிருப்பதால் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறேன். விகடனுக்கும் சத்யாவிற்கும் நன்றி!’ என்றார்.