6 மாத இடைவெளியில் தந்தையும், சகோதரரும் மறைந்தனர்.. இந்திய இளம் வீரரின் வாழ்வில் நடந்த சோகம்!

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள இளம் வீரர் ஆகாஷ் தீப்பின் வாழ்வை மாற்றிய தருணங்கள் குறித்து பார்க்கலாம்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த ஆகாஷ் தீப், பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை 29 முதல்தர போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் ஆகாஷ் தீப். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஒருநாள் அணியில் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார்.

அப்போது அவருக்கு இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் இந்திய ஏ அணிக்காக சிறப்பாக ஆடி வந்த ஆகாஷ் தீப், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கீழ் வரிசை பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாட கூடியவர் என்பதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அடுத்த இரண்டிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில், ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் தீப் தனது தொடக்க காலத்தை பற்றி பேசியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், பீகார் மாநிலத்திற்கு என்று சிறந்த கிரிக்கெட் பாரம்பரியம் கிடையாது. எனது தந்தை என்னை காவல்துறையில் பணியாற்றுவதற்கான தயாராக அறிவுறுத்தினார். குறைந்தபட்சம் கிளாஸ் 4 தேர்வு எழுதி அரசு பணியில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் 6 மாத இடைவெளியில் எனது தந்தை மற்றும் சகோதரர் இருவரும் இறந்தனர்.

அப்போது என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. அப்போது எனது கிளப் அணிக்காக கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தேன். ஆனால் சில மாதங்கள் பணக்கஷ்டம் இருந்தது. அப்போது மாவட்டத்தில் நடைபெறும் டென்னிஸ் பால் போட்டிகளில் மாதத்திற்கு 4 நாட்கள் விளையாடுவேன். டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடும் போது ஒரு நாளிலேயே ரூ.6 ஆயிரம் வரை சம்பாதிப்பேன். அதன் மூலமாக மாதம் ரூ.20 ஆயிரம் வரை எனது செலவுகளை சமாளிக்க முடியும்.

பீகாரில் கிரிக்கெட் பயிற்சிகள் மேற்கொள்வதற்காக போதுமான வசதிகள் கிடையாது. சாசாராம் பகுதியில் கிரிக்கெட் விளையாடுவது குற்றம் செய்வதை போல் பார்க்கப்படும். பெற்றோர் பலரும் அவர்களது குழந்தைகளை என்னுடன் சேர கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால் நான் கிரிக்கெட் மட்டுமே விளையாடுவேன். என்னுடன் விளையாடினால், அவர்களின் கல்வி பாதிக்கும் என்பார்கள். பெற்றோர் சொல்வதும் ஒரு வகையில் நியாயம் தான். ஏனென்றால் பீகார் போன்ற மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடி ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *