நிதி நெருக்கடி.. ரேசன் கடைகளில் துவரம் பருப்பு விற்பனை நிறுத்தமா? கருணாநிதி சொன்னது நினைவிருக்கா
சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிச்சந்தைகளில் துவரம் பருப்பு ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உளுந்தப்பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழை நடுத்தர மக்களுக்காக ரேசன் கடைகளில் மலிவு விலையில் துவரம்பருப்பு, உளுந்தப்பருப்பு விற்பனை செய்யப்பட்டது.
தமிழக ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும் சர்க்கரை கிலோ, 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், 1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும்; 1 லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, கோதுமையை மத்திய அரசு வழங்குகிறது. சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்குகிறது. இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை சிறப்பு பொது வினியோக திட்டத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அத்திட்டத்திற்கான கால அவகாசத்தை, அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும் நீட்டித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் துவரம்பருப்பு, பாமாயில் போன்றவைகளை ரேசன்கடைகளில் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் உள்ளன. பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெயும், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, பாமாயில், உளுந்தம் பருப்பு சரிவர வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டங்கள், அறிக்கைகள் வாயிலாக பொதுமக்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
துவரம் பருப்பு, பாமாயில் ரேஷன் கடைகளில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் உளுந்தம் பருப்பு மட்டும் கிடைக்கவில்லை. கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு ரேஷன் கடைகளில் இருந்த பட்டியலில் உளுந்தம் பருப்பு இருந்த இடம் அழிக்கப்பட்டுவிட்டது. அரசு டெண்டர் விட்டு உளுந்தம் பருப்பை கொண்டு வரவேண்டும். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அரசிடம் நிதி இல்லாததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் மக்கள் அதிக விலை கொடுத்து வெளிச்சந்தைகளில்தான் துவரம்பருப்பு வாங்கி வருகின்றனர்.