சூரத் நகரில் இருந்து துபாய்க்கு முதல் முறையாக விமானச் சேவை – ஏர் இந்தியா நிறுவனம்
நாட்டில் விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களில் மிகப் பெரியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து புதிய வழித்தடங்களில் சேவைகளை தொடங்க இந்த நிறுவனம் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
குஜராத் மாநிலம், சூரத் விமான நிலையத்தில் சர்வதேச முனையம் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து துபாய் நாட்டுக்கான முதலாவது விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியது.
வழித்தடம் :
சூரத் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு புறப்பட்ட IX 173 என்ற விமானம், துபாய்க்கு நண்பகல் 1.30 மணிக்கு சென்று அடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 171 விருந்தினர்கள் பயணம் செய்தனர். பயணிகள் அனைவருக்கும் தடையற்ற, சௌகரியமான பயண அனுபவம் கிடைத்திருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அலோக் சிங், முதலாம் விமானச் சேவையை தொடங்கி வைத்தார். அதன்படி பயணிகளில் சிலருக்கு அவர் போர்டிங் பாஸ் வழக்கி வழியனுப்பி வைத்தார்.
இதுகுறித்து அலோக் சிங் கூறுகையில், “எங்களுடைய விமானச் சேவை வழித்தடங்களை நாங்கள் விரிவாக்கம் செய்யும் நிலையில் சூரத் நகரம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் சூரத் விமான நிலையம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்று கருதுகிறோம். அந்த வகையில் புதிய முனையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை கொடுப்பதற்கு ஏர் இந்தியா நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சார்ஜா – சூரத் இடையே பயண வழித்தடம் :
துபாய் நாட்டுக்கு சர்வதேச விமானச் சேவையை தொடங்கியுள்ள நிலையில், ஷார்ஜா நாட்டுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நேரடி விமானச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. வாரம் ஒன்றுக்கு அந்த நிறுவனம் 5 விமானங்களை ஷார்ஜாவுக்கு இயக்குகிறது.
சூரத் – துபாய் வழித்தடத்திலும் வாரந்தோறும் 4 விமானச் சேவைகள் இயக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களை பயன்படுத்தி துபாய் அல்லது ஷார்ஜாவுக்கு பயணம் செல்ல விரும்பும் பயணிகள் இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது 3ஆம் தரப்பு தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே தற்போது இண்டிகோ நிறுவனமும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் தான அதிகப்படியான விமானங்களை இயக்கி வருகின்றன.