சினிமாவில் முதல் வாய்ப்பு… தேறமாட்டான் என விமர்சிக்கப்பட்ட சிவாஜி : பின்னாளில் நடந்து என்ன?
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். ஆனால் இவர் சினிமாவில் முதல் வாய்ப்பு பெறுவதற்கு பல போராட்டங்களை சந்தித்து பலரும் அறியாத உண்மையாக உள்ளது.
தமிழ் சினிமாவில் 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், ஒரு அறிமுக நடிகரை போல் இல்லாமல், அனுபவமிக்க நடிகராக சிவாஜி முதல் படத்திலேயே முத்திரை பாதித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வெற்றிகளை குவித்த சிவாஜி ஒரு கட்டத்தில் நடிகர் திகலம் என்ற அடைமொழியுடன், அவருக்கு முன்பே சினிமாவுக்கு வந்த எம்.ஜி.ஆருக்கு போட்டியாக மாறினார். எம்.ஜி.ஆர் பாணி வேறு, இவரது பாணி வேறு என்றாலும், இவருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது என்று சொல்லலாம். இந்த போட்டி அவர்களுக்கு இடையில் உள்ள நட்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அதேபோல் சினிமாவுக்கு வருவதற்கு முன், சிவாஜி நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி ஒரு நடிப்பு பல்கலைகழகம் என்று புகழப்படுவதற்கு காரணம் நாடகங்களில் அவருடன் இருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். இருவரும் இணைந்து பல நாடகளில் நடித்திருந்தாலும், சிவாஜிக்கு முன்பே எம்.ஆர்.ராதா சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். இதனால் நாடகங்கள் மட்டுமல்லாமல் சினிமாவிலும் தனக்கான தொடர்புகளை அதிகம் வைத்திருந்தார்.
சினிமாவில் நடிகராக இருந்தாலும், நாடகங்களிலும் கவனம் செலுத்திய எம்.ஆர்.ராதா, சிவாஜிக்கு பட வாய்ப்பு பெற்று தரும் முயற்சியில் அவரை அழைத்துக்கொண்டு கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார். அங்கு மங்கையர்கரசி என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. 1949-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பி.யூ.சின்னப்பா, கண்ணாம்பா, அஞ்சலி தேவி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில சிவாஜிக்கு வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் தயாரிப்பாளரை எம்.ஆர்.ராதா சந்தித்துள்ளார். அப்போது தயாரிப்பாளருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, நின்றுகொண்டிருந்த சிவாஜி கணேசனை பார்த்த அப்படத்தின் தயாரிப்பாளர், மிகவும் சளிப்பாக இவன் தேறமாட்டான் என்று கூறி வாய்ப்பு தர மறுத்துள்ளார். அதன்பிறகு பல தடைகளை கடந்த சிவாஜி கணேசன் 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பராசக்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜி கணேசன் நடிப்பு பல்கலைகழகம் என்று பெயரெடுத்தது அனைவரும் அறிந்த ஒன்று.