கனேடிய நகரமொன்றில் தீயில் சிக்கி மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி
கனடாவில், வீடு ஒன்று தீப்பற்றியதில், அந்த வீட்டிலிருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்துபேர் பலியான துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஐந்து பேர் பலியான பரிதாபம்
கனடாவின் Saskatchewan மாகாணத்திலுள்ள Davidson நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில், நேற்று முன்தினம், அதாவது, ஞாயிற்றுக்கிழமை மதியம் தீப்பற்றியுள்ளது.
தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் அந்த வீட்டுக்குள் சிக்கியிருந்த 80 வயது ஆண் ஒருவரையும், 81 வயது பெண் ஒருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டார்கள்.
வீட்டுக்குள் கண்ட அதிரவைத்த காட்சி
தீ பயங்கரமாக பற்றியெரிய, தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கப் போராடியுள்ளனர். தீ அணைக்கப்பட்ட பின் வீட்டுக்குள் சென்ற தீயணைப்புத்துறையினருக்கு அதிரவைக்கும் காட்சி ஒன்று காத்திருந்திருக்கிறது.
ஆம், வீட்டுக்குள் தீயில் சிக்கி பலியான மூன்று சிறுவர்களுடைய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூத்த பிள்ளைக்கு 7 வயது என கூறப்படுகிறது.
அந்தப் பிள்ளைகளின் தாய் வெளியே சென்றிருந்த நிலையில், அவர்களை அவர்களுடைய தாத்தா பாட்டிதான் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை, வீட்டில் தீப்பிடித்து அவர்கள் ஐந்து பேருமே பலியாகிவிட்டார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.