Flax Seed Ladoo: ஆயுளை அதிகரிக்கவும், கூந்தல் வளர்ச்சிக்கும் இந்த ஒரு லட்டு போதும்

நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கின்ற ஆசை நாம் அனைவருக்கும் இருக்கும்.

மருத்துவர்களும், சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டும்தான் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

அந்தவகையில், ஆரோக்கியமான நீண்ட நாள் வாழ்க்கைக்கு இந்த சத்தான ஆளி விதை லட்டு பெரிதளவில் உதவுகிறது.

தேவையான பொருட்கள்
ஆளி விதைகள்- 1கப்
வேர்க்கடலை- ½ கப்
ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
துருவிய வெல்லம்- 1 கப்
உலர் பழங்கள்- தேவையான அளவு
நெய்- 3 ஸ்பூன்
எள் – 1 ஸ்பூன்
தேங்காய்த் தூள்- ½ கப்
கோதுமை மா- ½ கப்

செய்முறை
முதலில் ஒரு வாணலில் ஆளி விதைகளை சேர்த்து மிதமான தீயில் வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின் அதே வாணலில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதனுடன் எள் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது வாணலில் நெய் சேர்த்து கோதுமை மாவை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த நிலக்கடலை, தேங்காய்த் துருவல், கோதுமை மாவு, ஆளி விதை சேர்த்து அரைக்க வேண்டும்.

பிறகு துருவிய வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். அடுத்து அரைத்த கலவையை ஒரு தட்டில் போட்டு, அதில் பொரித்த உலர் பழங்களைச் சேர்க்கவும்.

அடுத்து வறுத்த எள் சேர்த்து கையில் நெய் தடவி லட்டு போல் சிறிய சிறிய உருண்டையாக பிடித்து எடுத்தால் சத்தான ஆளி விதை லட்டு தயார்.

இதன் நன்மைகள்
ஆளி விதையில் ஒமேகா த்ரீ கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் அவற்றை கண்டிப்பாக சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆளி விதை எலும்புகளை பலப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது. இது முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. மேலும், சருமத்தை பொலிவாக்கும்.

ஆளி விதைகளால் செய்யப்பட்ட உணவை உண்பதால் உடலில் கொலஸ்ட்ரால் சேர்வது தடுக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் சேர்க்கவில்லை என்றால் இதய பிரச்சனைகள் வராது.

புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் ஆளி விதைகளுக்கு உண்டு. ஆளி விதைகள் எடை இழப்புக்கு உதவுகின்றன.

மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆளி விதைகளால் செய்யப்பட்ட உணவை சாப்பிட வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *