அகமதாபாத் – அயோத்தி இடையே விமான சேவை தொடக்கம்: முதல் மூன்று வார விமானங்களுக்கான போர்டிங் பாஸ் பெற்றார் யோகி ஆதித்யநாத்
அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது.
ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற ஜனவரி 15ம் தேதிக்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் ஜனவரி 16ம் தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22ம் தேதி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு பாரம்பரியங்களை சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிர, 2,200 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் ஆமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய அமைச்சர் வி.கே. சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அகமதாபாத் மற்றும் அயோத்தி இடையேயான முதல் மூன்று வார விமானங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனையடுத்து ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “டிசம்பர் 30ம் தேதி அயோத்தி மற்றும் டெல்லி இடையே இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் இயக்கப்படும் முதல் விமானத்தை நாங்கள் தொடங்கி வைத்தோம்.
இன்று அயோத்தியை ஆகமதாபாத்துடன் இணைத்துள்ளோம் .2014ல் உத்தரப் பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன, தற்போது அயோத்தி விமான நிலையம் உட்பட 10 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள் உ.பி.யில் மேலும் 5 விமான நிலையங்கள். அசம்கரில் தலா ஒரு விமான நிலையம் அமைக்கப்படும். அலிகார், மொராதாபாத், ஷ்ரவஸ்தி மற்றும் சித்ரகூட்டில் அடுத்த மாதம் திறக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெவாரில் சர்வதேச அளவிலான விமான நிலையம் தயாராகிவிடும்” என்று அவர் கூறினார். இதனிடையே உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, அகமதாபாத் மற்றும் அயோத்தி இடையேயான முதல் மூன்று வார விமானங்களுக்கான போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது.