ஐபோன் ஆர்டரை கேன்சல் செய்த பிளிப்கார்ட்… ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்
ஐஃபோன் வாங்குவதற்காக வாடிக்கையாளர் செய்திருந்த ஆர்டரை ரத்து செய்ததன் மூலமாக அவருக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்று நுகர்வோர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கூடுதல் லாபம் பெற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வாடிக்கையாளரின் ஆர்டரை அந்த நிறுவனம் ரத்து செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பான விசாரணை மத்திய மும்பை பகுதியில் உள்ள நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது.
மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி ஃபிளிப்கார்ட் ஆன்லைன் தளம் மூலமாக ரூ.39,628 மதிப்புள்ள ஐஃபோனை ஆர்டர் செய்திருந்தார். அதற்கான கட்டணத்தை அவர் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தியிருந்தார்.
ஆர்டர் செய்த இரண்டு நாட்களில், அதாவது ஜூலை 12ஆம் தேதி அவருக்கு ஐஃபோன் டெலிவரி செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், அன்றிலிருந்து 6 நாட்கள் கழித்து அவருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் அனுப்பி வைத்த மெசேஜில், அவருடைய ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் பேசியபோது, “வாடிக்கையாளரை பார்த்து பொருளை டெலிவரி செய்வதற்காக இ-கார்ட் டெலிவரி நிறுவன ஊழியர் பலமுறை முயற்சி செய்தார். ஆனால், வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டது’’ என்று பதில் அளிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல், ஐஃபோனுக்கு வாடிக்கையாளர் செலுத்தியிருந்த கட்டணம் திருப்பிச் செலுத்தப்பட்டது. ஆனால், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பதிலில் திருப்தி அடையாத வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மன வேதனை அடைந்துள்ளதாகவும் அவர் தன்னுடைய புகார் மனுவில் கூறியிருந்தார்.
வழக்கில் டெலிவரி நிறுவனமும் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், வாடிக்கையாளருக்கும், டெலிவரி நிறுவனத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அதே சமயம், ஃபிளிப்கார்ட் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், “பொருளை நாங்களே விற்பனை செய்வதாக வாடிக்கையாளர் தவறாக கருதியுள்ளார். ஆனால், நாங்கள் ஆன்லைன் தளத்தை மட்டுமே இயக்கி வருகிறோம். விற்பனையாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே இடைத்தரகராக மட்டுமே எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் தான் பொருட்களை எங்கள் தளம் வாயிலாக விற்பனை செய்கின்றனர்’’ என்று கூறப்பட்டிருந்தது. விற்பனையாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையில்தான் பிரச்சனை என்றும், அதில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் குறிப்பிட்டது. ஆனால், அந்நிறுவனத்தின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
வாடிக்கையாளர் தொடர்ந்து தொடர்பில் இருந்தபோதும், அவருக்கான ஆர்டரை தன்னிச்சையாக ரத்து செய்தது ஃபிளிப்கார்ட் நிறுவனம் என்றும், அதற்கு பொறுப்பேற்று வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.