வெள்ள பாதிப்பு: வீடுகளை சீரமைக்க முழு சம்பளத்தையும் நன்கொடையாக வழங்கும் தமிழ் தலைவாஸ் வீரர் மாசானமுத்து
Pro Kabaddi League | Tamil Thalaivas: தென் குமரிக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி தென் மாவட்டங்களை புரட்டப் போட்டது. விடிய விடிய பெய்த அதிகன மழை மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க செய்தது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஊர், நகரம், மாவட்டம் என அனைத்தையும் மூழ்கடித்தது.
தென் மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்கள் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தன. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் காற்றாற்று வெள்ளத்தால் மக்கள் தங்களின் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வரும் நிலையில், அரசு மக்களுக்கு உதவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி வீரரான தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது. அவரது குடும்பத்தினர் பாதுக்காப்பாக இருந்தாலும், வீட்டை மழை வெள்ளத்துக்கு பறிகொடுத்த தவிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், ‘தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க உதவுவேன்’ என தமிழ் தலைவாஸ் அணி வீரர் மாசானமுத்து லட்சுணன் கூறியுள்ளார். அறிமுக வீரரான அவரை கடந்த ஆண்டு நடந்த புரோ கபடி லீக் சீசன் 10 ஏலத்தில் 31.6 லட்ச ரூபாய்க்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது.