ஸ்டம்ப்-க்கு பூ மாலை.. பிட்சில் பூஜை.. கொஞ்சம் ஓவராக போகுதோ.. பயிற்சிக்கு முன் கேகேஆர் சேட்டை!

கேகேஆர் அணி வீரர்களின் பயிற்சிக்கு முன் அனைவரும் இணைந்து ஸ்டம்பிற்கு பூ மாலை வைத்து, பிட்சில் பூஜை செய்த சம்பவம் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. அதேபோல் 23ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இம்முறை கேகேஆர் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் இணைந்துள்ளார். லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர், கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக் கானின் அழைப்பின் பேரில் கொல்கத்தா அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இவர் பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

இருப்பினும் கேகேஆர் அணியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு கவுதம் கம்பீரின் கைகளில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே கேகேஆர் அணியின் பயிற்சி முகாம் தொடங்கினாலும், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நேற்று தான் கொல்கத்தா வந்து சேர்ந்தனர். குறிப்பாக ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் கேகேஆர் அணியினருடன் இணைந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா மைதானத்தில் கேகேஆர் அணி பயிற்சியை தொடங்கியது. இந்த பயிற்சிக்கு முன்பாக கேகேஆர் அணி நிர்வாகிகள், வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்து ஸ்டம்பிற்கு பூ மாலை வைத்து பிட்சிற்கு பூஜை செய்துள்ளனர். அதன்பின் ரிங்கு சிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன.

சில நாட்களுக்கு முன் மும்பை அணியின் பயிற்சி முகாம் தொடங்கப்பட்ட போது, கேப்டன் ஹர்திக் பாண்டியா சூடம் ஏற்றி வைத்தார். அதேபோல் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டார். அதே பாணியில் கேகேஆர் அணி ஒரு படி மேல் சென்று, பிட்ச் மற்றும் ஸ்டம்பிற்கு பூஜை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *