தண்ணீர் கேட்ட உணவு டெலிவரி பாய்! கிச்சனுக்கு சென்ற பெண் என்ஜினீயர் அலறல்! நடந்தது என்ன?
பெங்களூருரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணுக்கு உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஏஇசிஎஸ் லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து 30 வயது மதிக்கத்தக்க பெண் என்ஜினீயர் ஒருவர் பிரபல ஹோட்டலில் இருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். மாலை 6.45 மணிக்கு பெண் என்ஜினீயரிடம் டெலிவரி பாய் ஒருவர் வந்து உணவை வழங்கியுள்ளார். அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று அந்த பெண்ணிடம் அவர் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துள்ளார். பின்னர் ரொம்ப தாகமாக இருப்பதால் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் கொண்டு வருவதற்கு சமையல் அறைக்குள் சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற நபர் அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத பெண் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். பின்னர் சமையல் அறையில் இருந்த தோசைக்கல்லை எடுத்து டெலிவரி பாயை தாக்கினார்.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் அங்கிருந்து தப்பித்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆகாஷ(27) என்பவரை கைது செய்தனர். பெங்களூருவில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.