32 ஆண்டுகளில் முதல் முறை.. முகமது சிராஜ் மாபெரும் சாதனை..15 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி விக்கெட் வேட்டையில் ஈடுபட்டார். இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக தென்னாப்பிரிக்க அணி மோசமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி தற்போது தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. முகமது சிராஜ் இரையை தேடும் சிறுத்தை போல் ஆக்ரோஷமாக இன்று செயல்பட்டார். சிராஜை பார்த்து தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இன்று பயந்தது கண் முன் தெரிந்தது.
சிராஜின் அபார பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கரம், 2 ரன்களிலும், கேப்டன் டீன் ஏல்கார் 4 ரன்கள், டோனி டி சொர்ஸி இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதேபோன்று அறிமுக வீரராக களமிறங்க டிரிஸ்டன் ஸ் டப்ஸ் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதன் மூலம் கடந்த 32 ஆண்டுகளில் முதல்முறையாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் முதல் நான்கு வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள்.
அத்துடன் சிராஜ் நிறுத்தவில்லை. பும்ரா தொடர்ந்து 6 ஓவர்கள் வீசி ஓய்வு எடுத்துக் கொள்ள சிராஜ் தொடர்ந்து 9 ஓவர்கள் வீசினார். இதில் ஒரே ஓவரில் டேவிட் பெட்டிங்கம் விக்கெட்டையும் மார்க்கரம் விக்கெட்டையும் சிராஜ் வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜ் தொடர்ந்து 9 ஓவர்கள் வீசி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 46 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் மூலம் சிராஜ் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த செயல்பாடாக இது பார்க்கப்படுகிறது. மேலும் தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய வேகப்பந்துவீச்சாளரின் சிறந்த செயல்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது. எப்போதெல்லாம் வெளிநாட்டு டெஸ்ட்டில் விக்கெட்டுகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் சிராஜ் தன்னுடைய செயல்பாட்டால் இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார் என்று ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.