ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர் பட்டியல்: எலான் மஸ்கை பின் தள்ளி முதலிடம் பிடித்தார் அர்னால்ட்

நியூஜெர்ஸி: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி எல்விஎம்எச் குழும தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பட்டியலில் கூறியிருப்பதாவது:

கடந்த வெள்ளியன்று பிரெஞ்ச் பில்லியனர் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தாருக்கான சொத்து மதிப்பு 23.6 பில்லியன் டாலர் அதிகரித்ததையடுத்து நிகர சொத்து 207.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அதேசமயம், டெஸ்லா சிஇஓவான எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 13% அதாவது 18 பில்லியன் டாலர் சரிவடைந்து 204.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இதன் காரணமாக, எலானை பின்னுக்குத் தள்ளி அர்னால்ட் முதலிடத்தை பிடித்தார். இவ்விரு கோடீஸ்வரர்களும் 2022-ம் ஆண்டிலிருந்து ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை தக்க வைப்பதில் மாறிமாறி போட்டியிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜெஃப் பெசோஸ் (181.3 பில்லியன் டாலர்), லாரி எலிசன் (142.2 பில்லியன்), மார்க் ஜுகர்பெர்க் (139.1 பில்லியன்), வாரன் பஃபெட் (127.2 பில்லியன்), லாரி பேஜ் (127.1 பில்லியன்)ஆகியோர் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *