சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் இருந்து ரூ.1.57 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
சென்னையில் இருந்து மும்பை செல்ல விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் இருந்து ரூ.1.57 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பய்ணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது மும்பை செல்லவந்த விக்கி ஜெகதீஸ் பாட்டியா(35) என்ப்வரின் சூட்கேஸை ஸ்கேனிங் சோதனை செய்தனர். அப்போது கட்டுக் கட்டாக இருப்பதை கண்டுபிடித்தனர். இது பற்றி பயணியிடம் கேட்ட போது பிஸ்கட் பாக்கெட்டுகள் துணிகள் எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் சந்தேகம் அடைந்த ம்த்திய தொழில் பாதுகாப்பு போலீசார் சூட்கேசை திறந்து சோதனை செய்தனர்.
அப்போது துணிகள், பிஸ்கட்கள் வெளியே எடுத்த பின்னரும் சூட்கேஸ் கனமாக இருந்தது.
சூட்கேசை முழுமையாக சோதித்த போது அடிப்பாகத்தில் ரகசிய அறை வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். 13 பாக்கெட்டுகளில் அமெரிக்க டாலர்களும் 5 பாக்கெட்டுகளில் சவூதி ரியால்களும் இருந்தன. ரூ. 1 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பயணியிடம் மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் டி.ஐ.ஜி. ஶ்ரீராம் விசாரணை நடத்தினார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளுடன் மும்பை வாலிபரை விமான நிலைய வருமான வரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
உள்நாட்டு விமான நிலையத்தில் ஒன்றரை கோடி வெளிநாட்டு கரன்சி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.