ஃபாரின் போகும் அமைச்சர் டிஆர்பி ராஜா.. அதுவும் சுவிஸ்-க்கு.. எதற்காக திடீர் பயணம்..?
தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு நாள் கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாநிலத்தில் 26.9 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
இது முன்பு கணிக்கப்பட்ட 5 லட்சம் கோடி முதலீட்டு அளவை விடவும் அதிகமாகும். முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட முதலீட்டு விருப்பத்தின் அளவில் வெறும் 15-25 சதவீதம் மட்டுமே உண்மையில் பெறப்பட்டது. ஆனால் தற்போதைய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டில் 70 சதவீத முதலீடுகள் உண்மையான முதலீடுகளாக மாற்றப்படும் என்று நம்புவதாக டிஆர்பி ராஜா கூறினார். அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பல மாத திட்டமிடலுக்குப் பின்பு வெற்றிகரமாக முடிந்த கையோடு அடுத்த முக்கியமான பணியைக் கையில் எடுத்துள்ளார். இதற்காகச் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா தனது டீம் உடன் செல்கிறார்.தமிழ்நாட்டிற்கு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டி வெற்றி பெற்ற கையோடு வருகிற 15 முதல் 19 ஆம் தேதி வரை சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டிற்கு (WEF) அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தொழில் துறையினர் குழு செல்கிறது.Davos World Economic Forum என்பது இந்தியாவில் இருந்து மட்டும் அல்லாமல் உலகளவில் இருந்து வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் வருடத்திற்கு ஒருமுறை ஒன்றிணையும் முக்கியமான கூட்டமாகும்.இந்தக் கூட்டத்தில் தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் சமூகச் சவால்கள் குறித்து உலகளவில் விவாதிக்கப்படும். இது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டமாகும், இது வழக்கமாக ஜனவரியில் சுவிட்சர்லாந்தின் ஸ்கி நகரம் என அழைக்கப்படும் டாவோஸில் நடைபெறும்.இந்த World Economic Forum கூட்டத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தொழில் துறையினர் குழு தமிழ்நாட்டைச் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய முதலீட்டுத் துறையாகக் காட்டும் முயற்சியை மேற்கொள்ள உள்ளனர். கடந்த ஆண்டுக் கூட்டத்தில் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் World Economic Forum கூட்டத்தில் கலந்துகொண்டு மாபெரும் முதலீட்டைப் பெற்றது ஒட்டுமொத்த மாநிலங்களையும் வியக்க வைத்தது. இந்த முறை தமிழ்நாடு அரசு இந்த முயற்சியை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்த வெற்றியுடன் வர அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்களுக்கும், அவர் தலைமையிலான குழுவிற்கும் தமிழ் குட்ரிட்டன்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.