எங்களை மன்னிச்சிடுங்க.. கண்ணீரை துடைத்து கட்டியணைத்து வழி அனுப்பிய நீலகிரி கலெக்டர்
ஊட்டி: எங்களை மன்னித்து விடுங்கள் என்று கூறிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, சிறுத்தைக்கு 3 வயது மகளை பலி கொடுத்த தாயின் கண்ணீரைத் துடைத்தும் கட்டியணைத்தும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒற்றை சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தியபடி உலாவி வந்தது. அடுத்தடுடுத்து 4 பேரை கடித்தது. சரிதா என்ற பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே பந்தலூர் அருகே உள்ள தொண்டியாளம் பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் கடந்த 5 மற்றும் 6ம் தேதி வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். அப்போது திடீரென பெண்கள் அலறினார்கள். உடனே சத்தம் வந்த திசைக்கு வனத்துறையினர் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள், தேயிலை செடிகளுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியை கவ்வி இழுத்து சென்று விட்டதாக தெரிவித்தனர்.
உடனே வனத்துறையினர் தேயிலை செடிகளை விலக்கி தேடியபோது அங்கு கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் ஒரு சிறுமி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அவளை தோளில் தூக்கிக்கொண்டு, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே தேவாலா போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரித்தனர்.
அதில் அந்த சிறுமி, மேங்கோரேஞ்ச் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் கர்வா, மிலாந்தி தேவி தம்பதியின் மகள் நான்சி(வயது 3) என விசாரணையில் தெரியவந்தது.மேலும் சிறுமி நான்சி, தொண்டியாளம் அங்கன்வாடி மையத்தின் முன்பு சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தபோது, அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து சிறுத்தை பாய்ந்து வந்து, அவளை கவ்விச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்ததால் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதர்களை கடிக்கும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.