ஆந்திராவில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல் பாலாற்றை பாலைவனமாக்கும் சதியை முறியடிக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திரா கட்ட முயல்வது தொடர்பான சர்ச்சை 18 ஆண்டு வரலாறு கொண்டது.
உச்ச நீதிமன்றம் வரை சென்று பாமகவும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. இப்போது வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், புதிய அணை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியுள்ளது.
ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரா திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிகளை தடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.