Fractional investment: ரியல் எஸ்டேட் துறையில் புதிய வகை முதலீடு! முழுமையான வழிகாட்டி!
ரியல் எஸ்டேட் முதலீடுகளில் ஆர்வம் இருந்தாலும் போதிய பணம் இல்லாததால் பலர் அந்த ஆசையையே கைவிட்டுவிடுவர். அப்படிப்பட்டவர்களுக்கு தான் புது வகையான முதலீட்டு முறை பிரபலமாகி வருகிறது. இதனை FRACTIONAL INVESTMENT என அழைக்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் துறையில் புது வகை முதலீடு: ஒரு பீட்சா வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள். ஆனால் 200 ரூபாய் வேண்டும், உங்களிடம் 50 ரூபாய் தான் இருக்கிறது. இதே போன்ற சூழல் கொண்ட நான்கு பேர் கூட்டாக ஆளுக்கு 50 ரூபாய் முதலீடு செய்து பீட்சா வாங்கி ஆளுக்கு ஒரு துண்டினை உண்ணலாம். கிட்டதட்ட இது தான் FRACTIONAL INVESTMENT.
அதாவது விடுமுறை கால வில்லாக்கள், ரெசார்ட்டுகள், குடியிருப்புகள் என ரியஸ் எஸ்டேட் சம்பந்தப்பட்ட அனைத்திலும் இது போன்ற கூட்டு ஒப்பந்த முறையில் நான்கைந்து பேர் இணைந்து இடத்தை வாங்கலாம்.
கூட்டு முதலீட்டு முறை: ஒரு தனிநபரால் வாங்க முடியாத சொத்தை கூட்டாக நான்கைந்து பேர் இணைந்து வாங்கி அந்த சொத்துக்கு இணை உரிமையாளர்களாக இருப்பர். அந்த சொத்தின் முதலீட்டை எப்படி பகிர்ந்து கொண்டார்களோ அதே போல அதில் கிடைக்கும் லாபமும் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இது போன்ற FRACTIONAL INVESTMENT வாய்ப்பை வழங்கவே பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தங்களின் முதலீட்டை பரவலாக்க இந்த முதலீட்டு முறையை நாடலாம் என்கின்றனர் நிபுணர்கள். மற்ற முதலீடுகளை போலவே இதிலும் ரிஸ்க்குகள் உள்ளன. முதலீட்டாளர் நலன் கருதி இதற்கான ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும் என செபி ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.
ஆடம்பர சொத்துக்களை வாங்கலாம்: ஆடம்பரமான அல்லது லாபமளிக்க கூட சொத்துக்களில் இது போன்ற கூட்டு முதலீடுகள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன. இது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டான்மை அடிப்படையில் செயல்படுகிறது.
ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகள் என தொடங்கப்பட்ட கூட்டு முதலீடுகள் , தற்போது குடியிருப்புகள், வணிக நோக்கம் கொண்ட கட்டடங்கள் வரை நீண்டுள்ளன என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.முதலீட்டாளர்கள் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்ட பின்னரே இந்த முறையை அணுக வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: இது போன்ற வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் டிஜிட்டல் முறையிலேயே நீங்கள் முதலீடு செய்ய உதவுகின்றன. எனவே நாட்டின் எந்த பகுதியில் இருப்பவரும் ஆன்லைனிலேயே முதலீடு செய்யலாம். அந்த சொத்தை பராமரிப்பது, பாதுகாப்பது ஆகியவற்றை நிறுவனம் பார்த்துக் கொள்வோம். இது ஒரு தனிப்பட்ட வருமானத்தை தருவதால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
இது போன்ற வில்லாக்கள், ரெசார்ட்டுகளில் உரிமை கொண்டிருப்பவர்கள் , வருடத்தின் சில நாட்களுக்கு சென்று தங்கி கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் இதில் மோசடிக்கு வாய்ப்புள்ளதால் முறையான ஆய்வுக்கு பின்னரே இந்த முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவை பொறுத்தவரை இந்த துறையில் ஆரம்ப முதலீடு 15 லட்சம் வரை இருக்கும் என நைட் ஃபிரான்க் அறிக்கை கூறுகிறது. 2025க்குள் இந்த சந்தையின் மதிப்பு 8.9 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.