இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் துவங்கியது! குவிந்த பக்தர்கள்!
சொர்க்க வாசல் தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரவித்துள்ளது.
இது தொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதற்காக டிசம்பர் 23-ம்தேதியில் இருந்து நேற்று ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் வழிபாட்டுக்காக (வைகுண்ட துவார தரிசனம்) இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
அதற்கான இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் டிசம்பர் 22-ம் தேதி மதியம் தொடங்கி டிசம்பர் 25-ம் தேதி அதிகாலை 4.27 மணியுடன் முடிந்தது. அதில் இருந்து நேற்று வரை பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் திருப்பதியில் உள்ள கவுன்ட்டர்களில் இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் டோக்கன்கள்) தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி மீண்டும் இன்று ஜனவரி 2ம் அதிகாலை 4 மணி முதல் தொடங்குகியது.
இதன்படி இன்று அதிகாலை 4 மணியில் இருந்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள், இன்று மதியம் 12 மணியில் இருந்தே கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.