பிரான்ஸ் விவசாயிகள் போராட்டம்… அதிகரிக்கும் பதற்றம்: நிலைமை கைமீறிப்போனதால் பொலிஸ் நடவடிக்கை
பிரான்சில் விவசாயிகள் போராட்டம் அதிகரித்துவரும் நிலையில், தலைநகர் பாரீஸுக்கு அருகே உள்ள பிரபல உணவுச் சந்தை ஒன்றில் இடையூறு செய்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
உலகின் இரண்டாவது பெரிய சந்தை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு வெளியே, Rungis என்னுமிடத்தில் பெரிய உணவுச் சந்தை ஒன்று உள்ளது. மீன், மாமிசம், பழங்கள், காய்கறிகள் என 12 மில்லியன் மக்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் இந்த சந்தை, இவ்வகை சந்தைகளில் உலகில் இரண்டாவது பெரிய சந்தையாகும்.
சந்தைக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியவர்களை பொலிசார் அப்புறப்படுத்தினர். சந்தைக்குச் செல்லும் வழியை மறித்த விவசாயிகள் 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 15 பேரை பொலிசார் காவலில் அடைத்தனர்.
91 விவசாயிகள் கைது
பிரான்சில் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் இந்த சந்தைக்கு வருவதாக பொலிசாருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது.
ஊதிய உயர்வு, கட்டுப்பாடுகள் குறைப்பு முதலான கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சில் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், சந்தைக்கு உணவுப்பொருட்கள் கொண்டு செல்வோரை தடுத்த விவசாயிகள் உட்பட 91 விவசாயிகள் இதுவரை காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.