பூமர் அங்கிள் முதல் ஆடுஜீவிதம் வரை… இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?
பிற மொழி படங்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களாக மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய மலையாள படங்கள் தமிழ்நாட்டு திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்த நிலையில், வருகிற மார்ச் 29-ந் தேதி புனித வெள்ளி தினத்தன்றும் தமிழ் நாட்டில் பிறமொழி படங்களுக்கு போட்டியாக ஏராளமான தமிழ் படங்கள் ரிலீசுக்காக வரிசைகட்டி காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்கிற லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆடுஜீவிதம் (Aadujeevitham)
பிருத்விராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் ஆடுஜீவிதம். சுமார் 18 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் இப்படத்தை ஒருவழியாக எடுத்து முடித்து திரைக்கு கொண்டுவந்துள்ளார் இயக்குனர் பிளெஸி. இப்படத்தில் பிருத்விராஜ் ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற மார்ச் 29ந் தேதி திரைக்கு வருகிறது.
பூமர் அங்கிள் (Boomer Uncle)
ஸ்வதேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் பூமர் அங்கிள். இப்படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் ஓவியா கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படமும் மார்ச் 29-ந் தேதி புனித வெள்ளி தினத்தன்று திரைக்கு வர உள்ளது.
ஹாட் ஸ்பாட் (Hotspot)
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் தான் ஹாட் ஸ்பாட். இப்படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர், கெளரி கிஷான், அம்மு அபிராமி, என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
நேற்று இந்த நேரம் (Netru Indha Neram)
சாய் ரோஷன் இயக்கியுள்ள திரைப்படம் தான் நேற்று இந்த நேரம். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷாரிக் ஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். கெவின் இசையமைத்துள்ள இப்படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது.
கா (Kaa)
நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கா. சுந்தர் சி பாபு இசையமைத்துள்ள இப்படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் மார்ச் 29 அன்று திரை காண உள்ளது.
இடி மின்னல் காதல் (Idi Minnal Kadhal)
பாலாஜி மாதவன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் சிபி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் இடி மின்னல் காதல். சாம் சி எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படமும் மார்ச் 29-ல் திரைக்கு வர உள்ளது.
வெப்பம் குளிர் மழை (Veppam Kulir Mazhai)
பேஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் வெப்பம் குளிர் மழை. இப்படத்தை திரவ் தயாரித்துள்ளார். இப்படமும் புனித வெள்ளி தினமான மார்ச் 29-ந் தேதியன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
மணிகண்டன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன லவ்வர் திரைப்படம் வருகிற மார்ச் 27-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. பெர்த்மார்க் திரைப்படம் அன்றைய தினம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் மலையாளத்தில் மாஸ் ஹிட் அடித்த பிரேமலு படமும் மார்ச் 29-ந் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.