பாஸ்ட் டாக் முதல் இ சார்ஜிங் வரை.. தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் 4 பெரிய மாற்றங்கள்.. நோட் பண்ணுங்க
நாடு முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் நாட்களில் முக்கியமான பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. டோல் கேட் நீக்கம் தொடங்கி இ சார்ஜிங் பாயிண்டுகள் வரை செய்யப்பட உள்ள மாற்றங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
மாற்றம் 1: பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன மாசுவை குறைக்கும் முயற்சியில், நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக தங்க நாற்கர சாலையில் 6,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வாகனத்தை இயக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இ-மொபைலிட்டி மற்றும் இ-பஸ்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி சாலைகளில் மின்சார சார்ஜ் மையங்கள் அமைப்பது தொடங்கி பல மாற்றங்களில் மின்சார வாகனம் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்ய உள்ளனர்.
மாற்றம் 2: ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க, அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இருப்பது அவசியம். அரசாங்கம் திட்டமிட்டுள்ளபடி, இது மூன்றாம் தலைமுறை (3ஜி) மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ-கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலமாக இயங்கும்.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ஜி.பி.எஸ் ரெக்கார்டுகளை அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே, அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகள் ரூட் என்ன என்பதையும் அரசு தெரிந்து கொள்ளும். அவர்கள் எத்தனை டோல் கேட்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம்.
அதாவது வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.
டோல் கட்டணம்: விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
தற்போது பாஸ்ட் டாக் கட்டண முறை உள்ளது. இந்த சாட்டிலைட் முறை வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சுங்கச்சாவடிகள் மூடப்படும்.
மாற்றம் 3: நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் 1,000 நவீன கட்டிடங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது .
இது லாரி உள்ளிட்ட வணிக ஓட்டுநர்களுக்கு ஓய்வு எடுக்க வசதியாக கட்டப்படுகிறது. ஓட்டுனர்கள் இரவு நேரத்தில் உறங்க, சாப்பிட வசதியாக இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. டிரக், பஸ் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு நெடுஞ்சாலைகளில் ஓய்வு வசதிகளை இந்தக் கட்டிடங்கள் வழங்கும்.
இந்த வசதிகளில் பெரும்பகுதி எண்ணெய் நிறுவனங்களால் உருவாக்கப்படும். அதாவது பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் ஓட்டுனர்களுக்கு வசதியாக அந்த நிறுவனங்கள் இந்த இடங்களை உருவாக்கும். இதில் மற்ற லாரி டிரைவர்களும் தாங்கிக்கொள்ள முடியும். மீதம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (NHAI) உருவாக்கப்படும்.
முன்னதாக நாடு முழுக்க லாரிகளில் ஏசி கேபின் வைக்க அரசு திட்டமிட்டது. லாரிகளில் ஏசி கேபின்களை வழங்க ஒரு டிரக்கிற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாகனங்களுக்கான வேக வரம்பு கடைசியாக ஏப்ரல் 2018 இல் புதுப்பிக்கப்பட்டது. தற்போது,நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 100 கிமீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும் கார்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம் சராசரி வேகம் 70 கிமீ என்ற அளவில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ளது.
அதாவது 100 கிமீ அனுமதிக்கப்பட்டால் சாலை தரம், தடுப்புகள் காரணமாக சராசரி வேகம் 70 கிமீ ஆக உள்ளது. இதை 85 ஆக உயர்த்த.. அதாவது வாகனங்கள் சராசரியாக செல்லும் வேகத்தை அதிகரிக்க சாலைகளில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.