பிப்.12 முதல் தங்கப்பத்திரம் வெளியீடு! மக்களே வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

தங்கத்தில் முதலீடு செய்வது என்றாலே நகையாக வாங்குவது என்பது தான் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்தது. ஆனால் ஆபரணத்தை விட தங்கப் பத்திரங்களில் நீங்கள் வாங்கி வைக்கும் தங்கம், உங்களுக்கு வட்டியையும் சேர்த்து தருகிறது.

எனவே முதலீடு என்ற நோக்கத்தில் தங்க ஆபரணங்களை வாங்கி செய்கூலி சேதாரத்தில் பணத்தை வீண் செய்யாமல் பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்தது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் நான்காவது தங்கப் பத்திரம் பிப்.12 வெளியாகிறது.

தங்கத்தை விட தங்கப் பத்திரம் சிறந்ததா?: முதலீடு நோக்கத்தில் தங்க ஆபரணங்களை வாங்குபவர்கள் அதற்கு மாற்றாக தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்து சேமிக்கலாம். ஏனெனில் தங்கம் விலை உயர்வது மட்டுமின்றி நீங்கள் முதலீடு செய்த தங்கத்திற்கு வட்டியும் கிடைக்கும் என்பது தான் இதன் சிறப்பு.

நீங்கள் தற்போது அரசு நிர்ணயிக்கும் விலைக்கு தங்கம் வாங்குகிறீர்கள், அதுவே 8 ஆண்டுகள் முதிர்வு காலத்தின் போது தங்கத்தின் விலை என்னவோ அந்த தொகை உங்களுக்கு கிடைக்கும். நாளுக்கு நாள் தங்கம் விலை ஏறிக் கொண்டு தான் இருக்கிறது எனவே இது சிறந்த முதலீட்டு வாய்ப்பு.

ஆன்லைனில் வாங்கினால் தள்ளுபடி: நடப்பு நிதியாண்டின் நான்காம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 16ஆம் தேதி வரை தங்கப்பத்திரங்களை வாங்கி முதலீடு செய்யலாம்.

இந்த முறை தங்கப் பத்திரத்தில் ஒரு கிராமின் விலை ரூ.6,263 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் வாயிலாக பெற விரும்புவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடியும் கிடைக்கும். இவர்கள் ரூ.6,213 என்ற விலையில் ஒரு கிராம் தங்கத்தை பெறலாம்.

ஆண்டுக்கு இரண்டு முறை வட்டி: தங்க பத்திரங்களில் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு 2.5 சதவீதம் என ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டியை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம்.

தங்கப் பத்திரத்தை பொறுத்துவரை லாக் இன் பீரியட் எனப்படும் காத்திருப்பு காலம் 8 ஆண்டுகள். அதாவது 8 ஆண்டுகள் கழித்து அன்றைய தேதியில் 24 காரட் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். ஆபரணத் தங்கத்தில் விதிக்கப்படும் செய்கூலி, சேதாரங்கள் எல்லாம் இதில் கிடையாது.

எப்படி வாங்குவது: தங்கப் பத்திரத்தை வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் வாங்கலாம். மொபைல் பேங்கிங் மற்றும் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துவோர் ஆன்லைனிலேயே தள்ளுபடி விலையுடன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.

வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களுக்கு நேரில் செல்லும் போது ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

தங்கப் பத்திரத்தை தனிநபர்கள் 4 கிலோ வரையிலும், நிறுவனங்கள் மற்றும் டிரஸ்டுகள் பெயரில் வாங்குவோர் அதிகபட்சமாக 20 கிலோ வரையிலும் வாங்க இயலும். தங்கப் பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீட்டை கடனுக்கு பிணையாக காட்டலாம் .

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *