இந்தியாவின் லாட்டரி கிங் முதல் அதிக தேர்தல் நன்கொடை வழங்கியது வரை.. யார் இந்த லாட்டரி மார்டின்?
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்த நிலையில் நேற்று இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டது, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1368 கோடி நன்கொடை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோவையை சேர்ந்த லாட்டரி நிறுவனரான மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.
யார் இந்த சாண்டியாகோ மார்டின் ?
கோவை மாவட்டத்தை சேர்ந்த சாண்டியாகோ மார்ட்டின், மார்ட்டின் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். மிக இளம் வயதிலேயே லாட்டரி துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், புதுமை மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் லாட்டரி தொழிலில் கொடிகட்டி பறந்தார். இதனால் இந்தியாவின் ‘லாட்டரி கிங்’ என்றும் லாட்டரி மார்டின் என்றும் அவர் அழைக்கப்படுகிறார். லாட்டரி உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன், அவர் மியான்மரின் யாங்கூனில் தொழிலாளியாகப் பணிபுரிந்தார்.
தொழிலாளி முதல் தொழில் அதிபர் வரை
1988 ஆம் ஆண்டில், இந்தியாவுக்குத் திரும்பிய அவர், தமிழ்நாட்டில் ஒரு லாட்டரி நிறுவனத்தை நிறுவினார். அவரின் தொழில் கர்நாடகா, கேரளா தொடங்கி வடகிழக்கு இந்தியா முழுவதும் விரிவடைந்து, காலப்போக்கில் பூட்டான் மற்றும் நேபாளம் வரை மார்ட்டினின் லாட்டரி நிறுவனம் விரிவடைந்தது.
மார்டினின் நிறுவனங்களில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளம் என லாட்டரிகள் சட்டப்பூர்வமாக உள்ள 13 மாநிலங்களில் 1,000 பணியாளர்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது . நாகாலாந்து மற்றும் சிக்கிமில், பிரபலமான ‘டியர் லாட்டரி’யின் ஒரே விநியோகஸ்தராக மார்டினின் பியூச்சர் நிறுவனம் உள்ளது.
வருமான வரி, அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய லாட்டரி மார்டின்
2008 ஆம் ஆண்டில், சிக்கிம் அரசுக்கு எதிராக 4,500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக மார்ட்டின் கவனத்திற்கு வந்தார். 2011 ஆம் ஆண்டில், சட்டவிரோத லாட்டரி வணிகங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறையினரின் தேடுதல்களை எதிர்கொண்டார். 2013 ஆம் ஆண்டில், கேரளாவில் சட்டவிரோத லாட்டரி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மார்ட்டின் வளாகத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தினர்.
2015 ஆம் ஆண்டில், வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மார்ட்டின் நிறுவனங்களில் சோதனை நடத்தினர். மே 2023 இல், சிக்கிம் அரசுக்கு ரூ.900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மார்ட்டினின் ரூ.457 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
எனினும் லாட்டரி துறையை தாண்டியும் மார்ட்டினின் வணிகம் விரிவடைந்தது. கோவை அருகே மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை நடத்தி வருகிறார். மேலும் SS மியூசிக் என்ற இசை டிவி சேனல், எம் மற்றும் சி சொத்து மேம்பாடு( M and C Property Development); மார்ட்டின் நந்தவனம் குடியிருப்புகள்; லீமா ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மார்ட்டினுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
அகில இந்திய லாட்டரி வர்த்தகம் மற்றும் அது சார்ந்த தொழில்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் மார்ட்டின் இருக்கிறார். இந்த அமைப்பு இந்தியாவில் லாட்டரி வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், நம்பகத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. .