கமல்ஹாசன் முதல் சிம்பு வரை : விஜயகாந்த் மறைவுக்கு நடிகர்கள் இரங்கல்
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் முக்கிய தலைவராக உருவெடுத்த கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். அவருக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கிய விஜயகாந்த், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படம் தான். இந்த படம் வெளியானதற்கு பின் முன்னணி நடிகராக உயர்ந்த விஜயகாந்த், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
சினிமாவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு, புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு என தமிழ் சினிமாவில் தனித்தன்மையுடன் இருந்த விஜயகாந்த், ஒரு கட்டத்தில் அரசியலிலும் என்டரி கொடுத்தார். தனது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராகவும் உருவெடுத்தார்,
இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில்,
நேற்று மாலை உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை மியாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்
, இன்று காலை 6 மணியளவில் மரணமடைந்தார்.
அவரது மரணம் தமிழ் சினிமா மற்றும் அரசியலில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.