இனிமே நீதான்யா ஆளு.. அறிமுக போட்டியிலே மிரட்டல் சம்பவம்.. சிஎஸ்கே பாசறையில் ஜொலித்த ரச்சின்!
சிஎஸ்கே அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியில் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக சுமார் 600 ரன்களை விளாசிய ரச்சின் ரவீந்திரா, இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியமளிக்கும் வகையில் ரூ.1.8 கோடிக்கு சிஎஸ்கே அணி இவரை வாங்கியது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
ஆனால் சிஎஸ்கே அணியின் பேக் அப் வீரராகவே ரச்சின் ரவீந்திரா இருப்பார் என்று கணிக்கப்பட்டது. ஏனென்றால் தொடக்க வீரராக கான்வே இருக்கும் போது ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என்றே பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கான்வே கையில் காயம் ஏற்பட, அவர் மே மாதம் வரை ஓய்வு எடுக்க நிலை ஏற்பட்டது.
இதனால் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. இதில் ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்பட, அவரின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஃபீல்டிங்கிலேயே டூ பிளஸிஸ் மற்றும் விராட் கோலி இருவரையும் வீழ்த்த முக்கிய காரணமாக அமைந்தார்.
தொடர்ந்து 174 ரன்கள் இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி களமிறங்கியது. அப்போது ருதுராஜ் கெய்க்வாட் – ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நின்றிருந்த ரச்சின் ரவீந்திரா சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். குறிப்பாக ஷார்ட் பால்கள் வீசப்பட்டாலே, சற்றும் யோசிக்காமல் சிக்சர் விளாசினார்.
சிறப்பாக ஆடிய அவர் 15 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சேப்பாக்கம் மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டிய ரச்சின் ரவீந்திரா, ஸ்பின்னர்களையும் விளாசுவாரா என்பது அடுத்தடுத்த போட்டிகளில் தெரிய வரும். இதன் மூலம் கான்வே விட்டுச்சென்ற இடத்தை ரச்சின் ரவீந்திராவால் நிரப்ப முடியும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.