ராசையா முதல் மாநாடு வரை.. பாடகி பவதாரிணி குரலில் ஒலித்த மனதை மயக்கும் சூப்பர் ஹிட் பாடல்கள் – ஒரு பார்வை!
தமிழ் திரையுலகில் எண்ணற்ற சிறந்த பாடல்களை தனது தனித்துவமான குரலால் கொடுத்தவர் தான் பவதாரிணி. கடந்த 1995ம் ஆண்டு வெளியான பிரபு தேவாவின் ராசையா என்ற படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த பாடலின் மூலம் தான் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1997ம் ஆண்டு வெளியான நடிகர் பிரபுவின் தேடினேன் வந்தது என்ற படத்தில் வரும் “ஆல்ப்ஸ் மலை காற்று வந்து” என்ற பாடல் இவர் குரலில் உருவான பாடல் தான். அதே ஆண்டு வெளியான தளபதி விஜய் அவர்களின் காதலுக்கு மரியாதை படத்தில் வரும் “என்னை தாலாட்ட வருவாளா” என்ற பாடலில் வரும் பெண்ணின் குரல் பாவதாரிணியுடையது தான்.
பெரும்பாலும் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையில் மட்டுமே பல பாடல்களை பாடியுள்ளார் பவதாரிணி. அந்த வகையில் 2000வது ஆண்டு இசைஞானி இசையில் வெளியான “பாரதி” படத்தில் வரும் “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலுக்காக பாவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. Friends படத்தில் வந்த “தென்றல் வரும் இரவை” மற்றும் ஒரு நாள் இரு கனவு படத்தில் வரும் “காற்றில் வரும் கீதமே” ஆகிய மனதை மயக்கும் பாடல்களும் இவர் குரலில் உருவானவை தான்.
கோவா, மங்காத்தா மற்றும் அநேகன் உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ள பவதாரிணி இறுதியாக தனது சகோதரர் இசையில் உருவான சிம்புவின் மாநாடு படத்தில் வரும் “மாஷா அல்லாஹ்” என்ற பாடலை தான் பாடியுள்ளார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றது. 47 வயதான பாவதாரிணியின் இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.