வயிற்றுப் பிடிப்பு முதல் மனஅழுத்தம் வரை – மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு இதோ!
மாதவிலக்கு என்பது பெண்களுக்கு இயற்கையாக நடைபெறக் கூடிய ஒரு சுழற்சி ஆகும். ஒவ்வொரு மாதமும் 3 முதல் 5 நாட்கள் வரக் கூடிய மாதவிலக்கு காலத்தில் அசௌகரியம், மிகுதியான வலி போன்ற சவால்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர். அதிலும் மாதவிலக்கு சீரற்ற வகையில் இருந்தால் பெண்களுக்கான பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.
ஆக, மாதவிலக்கு காலத்தில் பெண்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதே சமயம் வாழ்வியல் மாற்றங்களின் மூலமாகவும், வீட்டிலேயே முயற்சி செய்யக் கூடிய எளிய முறை சிகிச்சைகளின் மூலமாகவும் இதற்கு நாம் தீர்வு காண முடியும்.
இதுகுறித்து மருத்துவர் கார்கி கோஹர் கூறுகையில், “மாதவிலக்கிற்கும், பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் எந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது என்பதை ஒரு மருத்துவராக என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படுகின்ற அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும், இந்த காலகட்டத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அதாவது பெண்கள் தங்கள் உடல் குறித்து ஆழமான புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
சூடான காட்டன் துணியை வைத்து அடிவயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது, இலவங்க பட்டை, இஞ்சி போன்ற மூலிகை டீ அருந்துவது போன்ற வழிமுறைகளை கையாளலாம்’’ என்று தெரிவித்தார்.
மகப்பேறு மருத்துவர் அக்ஷனா இதுகுறித்து கூறும்போது, “கால்சியம், மெக்னீசியம், விட்டமின் பி போன்ற சத்து கொண்ட உணவுகளை சாப்பிட்டால் மாதவிலக்கு கால பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும்’’ என்று தெரிவித்தார். அதேபோல சானிட்டரி நாப்கின், டேம்பான், மென்சுரல் கப் போன்ற சுகாதாரமான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
வீட்டு முறை தீர்வுகள் :
அழற்சிக்கு எதிரான பண்புகளைக் கொண்ட இஞ்சி டீ அருந்துவது இடுப்பு வலி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும்.
இலவங்கப் பட்டை கொண்டு தயார் செய்யப்பட்ட கசாயம் அருந்தினால் அதிகப்படியான உதிரப்போக்கு தவிர்க்கப்படும். இதனை உணவிலும் பொடியாக சேர்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள் பால் அருந்தினால் மாதவிலக்கு கால வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வெந்தயத்தை பச்சரியுடன் சேர்த்து வேக வைத்து வெந்தயக் கஞ்சி அருந்தலாம். இது வயிறு உப்புசம், பிடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கும்.
காட்டன் துணி கொண்டு சூடான நீரில் நனைத்து, பிழிந்து அடிவயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.
குளிர்ச்சித்தன்மை கொண்ட புதினாவை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட ஆளி விதைகளை சாப்பிட்டால் வலி நிவாரணம் கிடைக்கும். இதனை தயிரில் கலந்தும் சாப்பிடலாம்.