திருநெல்வேலி முதல் அமெரிக்காவரை… சிகப்பு ரோஜாக்களின் சுவாரஸிய இன்ஸ்பிரேஷன்
தமிழின் சைக்கோ சீரியல் கில்லர் திரைப்படங்களில் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. அவர் எத்தனை ஃபயரான இயக்குநராக இருந்தார் என்பதை இந்தப் படத்தை அவர் எடுத்த காலகட்டத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பாரதிராஜாவின் முதலிரு படங்கள் 16 வயதினிலேயும், கிழக்கே போகும் ரயிலும் பம்பர்ஹிட் படங்கள். கிழக்கே போகும் ரயில் தொடர்ந்து ஓரு வருடம் ஓடியது. இதையடுத்து அவர் சிட்டி சப்ஜெக்டை இயக்குகிறார் என்றதும், பாரதிராஜாவுக்கு ஏனிந்த வேண்டாத வேலை என்று அவரை அறிந்தவர்கள் பேசத் தொடங்கினர். பத்திரிகைகள், தெரிந்த கிராமத்தைவிட்டு, நகரத்துக்கு எதுக்கு வண்டியேறுகிறார் என்று எழுதின. அதுவே பாரதிராஜாவுக்கு வாலைத்திருகிவிட்டது போல் ஆனது. சிட்டி சப்ஜெக்டை எடுக்கிறோம், எல்லாரையும் அசத்துறோம் என்று எழுதப்பட்டதுதான் சிகப்பு ரோஜாக்கள் ஸ்கிரிப்ட். இதில் 90 சதவீத பங்களிப்பு பாக்யராஜுடையது.
திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞன் மும்பை சென்று அங்கு மனநலம் பாதிக்கப்பட்டு, இளம் பெண்களை கொலை செய்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாரதிராஜாவும், பாக்யராஜும் சிகப்பு ரோஜாக்கள் கதையை எழுதினர். சைக்கோ கில்லராக நடிக்க பாரதிராஜா அணுகிய இரண்டு நடிகர்கள் சம்மதிக்கவில்லை. அவர்களில் ஒருவர் சிவகுமார். பாரதிராஜாவின் உதவியாளர்களுக்கு சிவகுமார் அந்த வேடத்துக்கு செட்டாக மாட்டார் என்று எண்ணம். பாரதிராஜாவுக்கு, இல்லை சரியாக இருப்பார் என்ற நம்பிக்கை. கடைசியில் கதையை கேட்ட சிவகுமார், எனக்கு இந்த வேடம் சரிவராது என்று நிராகரிக்க, கமலிடம் சென்றார். கதையை கேட்ட உடனேயே கமல் நடிக்க ஒப்புக் கொண்டார்.
மொத்தம் 20 நாள்களில் பாரதிராஜா படத்தை எடுத்து முடித்தார். இதில் கமலின் காஸ்ட்யூம் பாஷாக இருக்கும். அமெரிக்க சைக்கோ கில்லர்கள் டெட் பண்டி, ஆல்பர்ட் டிசால்வோ அணியும் அதே வடிவ கோட்டை கமல் தனது காஸ்ட்யூமாக தேர்வு செய்தார். நடிகர் ஆலன் அர்கின், சைக்கோ கில்லர் திரைப்படமான வெயிட் அன்டில் டார்க் படத்தில், கறுப்பு ஜாக்கெட் அணிந்து ஒரு காட்சியில் வருவார். அதேபோன்ற கறுப்பு லெதர் ஜாக்கெட்டை கமல் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு காட்சியில் பயன்படுத்தியிருப்பார்.
படத்தின் கதையை திருநெல்வேலி சைக்கோ கில்லரிடமிருந்து பாரதிராஜா எடுக்க, அமெரிக்க சைக்கோ கில்லர்கள் மற்றும் சைக்கோ கில்லர் திரைப்படத்திலிருந்து தனது உடைகளுக்கான இன்ஸ்பிரேஷனை கமல் பெற்றுக் கொண்டார். இந்த சைக்கோ கில்லர்களின் கதைகள் ஹாலிவுட்டில் திரைப்படமாக வந்துள்ளன. ஆல்பர்ட் டிசால்வோ அனைத்து வயது பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தவன். இவனது முக்கிய இயங்குதளம் பாஸ்டன் நகர். இவன் கதையை 1964 இல், த ஸ்ட்ராங்குலர் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தனர். பிறகு 1968 இல் பாஸ்டன் ஸ்ட்ராங்குலர் என்ற பெயரில் ஒரு படம் வந்தது. சென்ற வருடம் இதே பெயரில் புதிய படம் வந்தது. மூன்றும் ஆல்பர்ட் டிசால்வோ நடித்திய படுகொலையின் பின்னணியில் எடுக்கப்பட்டவை.
சைக்கோ கில்லர் திரைப்படங்களுக்கு ஒரு சுவாரஸியம் உண்டு. சிகப்பு ரோஜாக்கள் போன்ற சைக்கோ கில்லர் திரைப்படங்கள் தமிழில் அரிதாகவே வெளியாகின்றன. ஹீரோக்களே சைக்கோ போல நடந்து கொள்வதாலும் இருக்கலாம்.