இன்று இறுதிசடங்குகள்… பாடகி பிரபா அத்ரேவுக்கு திரையுலகினர் அஞ்சலி! பிரதமர் மோடி இரங்கல்!
பிரபல இந்துஸ்தான் இசை பாடகியும், பத்மவிபூஷன் விருது பெற்றவருமான பழம்பெரும் பாடகி பிரபா அத்ரே நேற்று முன் தினம் ஜனவரி 13ம் தேதி காலை மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 92. இந்நிலையில், இன்று புனேவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிசடங்குகள் நடைப்பெற உள்ளது.
இந்திய பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அமைச்சர் பெருமக்கள், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் என பலரும் பாடகி பிரபா அத்ரே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் பாடகி பிரபா அத்ரேயின் உறவினர்கள் வர வேண்டும் என்பதால் ஜனவரி 13ம் தேதி காலமான பாடகி பிரபா அத்ரேயின் இறுதி சடங்குகள் இன்று நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் காலை, புனேவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த போது பாடகி பிரபா அத்ரேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபா அத்ரேயை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இசையில் டாக்டர் பட்டம் பெற்றவரான பிரபா அத்ரே, கடந்த செப்டம்பர் 13, 1932 அன்று பிறந்தார். கர்நாடக இசையில் நிபுணத்துவம் பெற்றிருப்பது மட்டுமல்லாது, இசையமைப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர் பாடகி பிரபா அத்ரே.