கேலோ இந்தியா விளையாட்டு போட்டி – கூடைப்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றி!
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் 6ஆவது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகள் தொடங்கப்பட்டது. கோவையில் நடந்த முதல் கூடைப்பந்தாட்ட போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சண்டிகார் அணிகள் மோதின. இதில், ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
உத்தரப்பிரதேசம் மற்றும் மிசோரம் அணிகளுக்கு இடையிலான மற்றொரு போட்டியில் உத்தரப்பிரதேச அணி வெற்றி வாகை சூடியது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், தமிழ்நாடு அணியானது 99 புள்ளிகள் பெற்ற நிலையில், 27 புள்ளிகள் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தியது. இதே போன்று நடந்த மகளிருக்கான போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணியானது 4 சுற்றுகளில் வெற்றி பெற்று 109 புள்ளிகள் பெற்று வெற்றி வாகை சூடியது.
இதுவரையில் நடந்த போட்டிகளின் படி தமிழ்நாடு 4 தங்கம், 2 வெண்கலம் கைப்பற்றி புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. டெல்லி 3 தங்கம் 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கத்துடன் 2ஆவது இடத்திலும், மேற்கு வங்கம் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கத்துடன் 3ஆவது இடத்திலும், மணிப்பூர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கத்துடன் 4ஆவது இடத்திலும், பஞ்சாப் அணியானது ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5ஆவது இடத்திலும் இருக்கின்றன.