தினமும் ரூ.1.5 கோடி சம்பாதிக்கும் குப்பை சேகரிப்பாளர்கள்! டெல்லியில் குப்பைக்கே இவ்ளோ வேல்யூவா!

டெல்லியில் வசிப்பவர்கள் தினமும் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்களை குப்பையில் வீசுகிறார்கள் என இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி (ASCI) அண்மையில் நடத்திய தணிக்கையில் தெரியவந்துள்ளது. டெல்லிவாசிகளால் வீசப்படும் 10 சதவீத குப்பைகள், குப்பை சேகரிப்பாளர்களால் பிரிக்கப்பட்டு, விற்கப்படுகின்றன எனவும் தெரிந்துள்ளது.

டெல்லி வாழ் மக்கள் தினமும் 11,030 மெட்ரிக் டன் குப்பைகளை உருவாக்குகிறார்கள். இதில், 10 சதவீதம் (அதாவது 1.10 லட்சம் கிலோ) குப்பை பிளாஸ்டிக், இரும்பு, மின் கழிவு, ரப்பர் மற்றும் காகித அட்டை வடிவில் உள்ளவை. பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் இந்தக் குப்பையைச் சேரிக்கும் மக்களுக்கு அவை வாழ்வாதாரம் அளிக்கின்றன.

விற்பனையாகும் கழிவுகள் மூலம் தினமும் ரூ.1.32 கோடி வருவாய் ஈட்டுகின்றனர். பிளாஸ்டிக் தவிர, இரும்பு, காகிதக் கழிவுகளையும் சேர்த்தால், இதன் தொகை, 5 கோடி ரூபாய் வரை உயரும். டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அதன் தூய்மையை மேம்படுத்தவும் சுகாதாரக் குறைபாடுகளைக் கண்டறியவும் இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி மூலம் இந்தத் தணிக்கையை நடத்தியுள்ளது.

டெல்லியில் தினமும் உற்பத்தியாகும் 11,030 மெட்ரிக் டன் குப்பையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக திட்டமிடப்படாத பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. மூன்று சதவீத கழிவுகள் மெட்டீரியல் ரெக்கவரி (MRF) மூலம் அகற்றப்படுகிறது. 55 சதவீதத்துக்கும் அதிகமான கழிவுகள் கழிவுகளில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 20 சதவீத குப்பைகள் குப்பை கிடங்குக்குச் செல்கின்றன.

டெல்லியில் ஏழு சதவீத குப்பைகள் தெருக்களிலும் சாலைகளிலும் சிதறிக் கிடக்கின்றன. குப்பைகளைச் சேகரிப்பவர்கள் மாதம் 14,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார் என்றும் அவர்களுக்கு மேல் உள்ள ஒப்பந்ததாரர்கள் மாதம்தோறும் சுமார் ரூ.25,000 சம்பாதிக்கிறார்கள் என்றும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.

தணிக்கையில் அறிக்கையில் சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. வீடு வீடாக குப்பை சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும், சாலைகள் மற்றும் தெருக்களில் தூய்மையை மேம்படுத்த வேண்டும், குப்பைகளை அகற்றும் பணியை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும், தூய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வார்டு அளவிலும் மண்டல அளவிலும் குப்பை அகற்றும் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *