கேப்பில் ‘சிக்ஸ்’ அடிக்கும் கௌதம் அதானி.. புதிய சிமெண்ட் நிறுவனத்தை கைப்பற்றினார்..!!
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்த கௌதம் அதானி ஓரிரு நாட்களிலேயே 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
முதல் இடமோ, 2வது இடமோ, எந்த இடத்தில் இருந்தாலும் கவலை இல்லை என்ற வகையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறார் கௌதம் அதானி. அதானி குழுமத்திற்குச் சொந்தமான ஏசிசி லிமிடெட் தனது உற்பத்தி, விநியோகத்தை அதிகரித்து நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக உயர வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் வேளையில் தொடர்ந்து சிமெண்ட் துறை சார்ந்த வர்த்தகத்தைக் கைப்பற்றி வருகிறார். ஏசிசி நிறுவனம் 425.96 கோடி ரூபாய்க்கு ஏசியன் கான்க்ரீட்ஸ் மற்றும் சிமெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 55% பங்குகளை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக இந்நிறுவனம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது. 08 ஜனவரி ஆம் தேதியன்று ACC லிமிடெட் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஏசியன் கான்க்ரீட்ஸ் மற்றும் சிமெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளது என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறோம் என ஏசிசி சிமென்ட் நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் ஏற்கனவே ஏசியன் கான்கிரீட் மற்றும் சிமெண்ட்களில் 45% ஈக்விட்டி பங்குகளை வாங்கிய நிலையில், திங்கட்கிழமை ஒப்பந்தத்தின் மூலம் இந்த நிறுவனத்தின் 100% கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. புதிதாகக் கைப்பற்றப்பட்டு உள்ள 55% பங்குகளுக்கு 425.96 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் உச்ச நீதிமன்றம் அதானி – ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரத்தில் அதானி குழுமத்திற்குச் சாதகமாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கும் வேளையிலும் செபிக்கு மீதமுள்ள 2 குற்றச்சாட்டுகளை அடுத்த 3 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டது. இந்த கேப்பை கௌதம் அதானி சாதகமாக பயன்படுத்தியுள்ளார், இந்த அறிவிப்பி வந்த பின்னர் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் இக்குழுமத்திற்கான நிதி ஆதாரத்தை அதிகரித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து நிறுவனங்களைக் கைப்பற்றுவதிலும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதிலும் களமிறங்கியுள்ளது. சமீபத்தில் டிரோன் மற்றும் ஏவுகணை தயாரிப்பை அதிகரிக்கும் திட்டத்தை வெளியிட்டது.