மாதம் 300 யூனிட் மின்சாரம் தயாரித்து ரூ.15,000 சேமிக்கலாம்! சோலார் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: பிரதமரின் சூரிய மின்சார சேமிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்தை அறிவித்திருந்தார்.

இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாக்கூர், பிரதமரின் சூரிய மின்சார சேமிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக கூறினார். ஒரு கோடி வீடுகளில் மாதத்துக்கு 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இது குறித்து இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேசிய நிதியமைச்சர், “பிரதமரின் சூரிய மின்சார திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்படும் சூரிய மின்சக்தி தகடுகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.இத்தகைய இலவச சூரிய மின்சாரத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.15,000-ரூ.18,000 அந்தக் குடும்பத்தினரால் சேமிக்க முடியும். எஞ்சிய மின்சாரத்தை மின்பகிர்மான நிறுவனங்களுக்கு அவர்கள் விற்பனை செய்யலாம்.

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றம் செய்தல், சூரிய மின்சக்தி தகடுகள் விற்பனை, அவற்றைப் பொருத்துதல் ஆகியவற்றால் அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகளுக்குத் தொழில் வாய்ப்புகள் கிடைப்பதில் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும். சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தி, அவற்றைப் பொருத்துதல், பராமரிப்பு போன்ற தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர்களுக்கு இந்தத் திட்டத்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தொடக்கக் கட்டமாக கடற்கரையோரங்களில் நிறுவப்படும் ஒரு ஜிகாவாட் மின்திறன் கொண்ட காற்றாலை மின்திட்டத்துக்கான உள்கட்டமைப்புக்கு நிதி ஆதரவு அளிக்கப்படும்” என்று கூறியிருந்தார். மேலும் இந்த திடத்திற்கு முதற்கட்டமாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படுவதாகவும், 2027ம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிருந்து 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக மொத்தமாக ரூ.75,021 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில், வீடுகளில் மேற்கூரையில் சூரிய மின்சாரத்தை சேமிக்க தகடுகளை பொறுத்தும் திட்டம் ஏற்கெனவே செயல்முறையில் இருந்து வருகிறது. இது தற்போது புதிய விதிமுறைகளின் கீழ் செயல்படுத்தப்படும்.

அதாவது வீடுகளில் 2 கிலோவாட் மின்சாரத்தை தயாரிக்க பொருத்தப்படும் கருவிகளுக்கு ஆகும் செலவுகளில் 60 சதவிகிதத்தை மத்திய அரசு நிதி உதவியாக வழங்குகிறது. அதேபோல 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட சிஸ்டங்களுக்கு 40 சதவிகித செலவை ஈடுகட்ட மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.

புரியும்படி சொல்வதெனில் 1 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.30,000 மானியம், 2 கிலோவாட் சிஸ்டம்களுக்கு ரூ.60,000 மற்றும் 3 கிலோவாட் அல்லது அதற்கும் அதிகமான சிஸ்டங்களுக்கு ரூ.78,000 மானியம் வழங்கப்படும். இது தவிர அடமானம் ஏதும் இல்லாமல் அரசு கடனையும் வழங்க தயாராக இருக்கிறது. இந்த திட்டத்திற்கு, ‘பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா’ என பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *