ஜெர்மன் ஆட்டோ நிறுவனம் ZF; சென்னை ஆலை மூலம் 5000 புதிய வேலைவாய்ப்புகள்

ஜெர்மனியின் டியர் 1 ஆட்டோ பாகங்கள் கம்பெனியான இசட்எப் சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் அந்த நிறுவனத்தின் 19 ஆவது மற்றும் தமிழ்நாட்டில் 10 ஆவது ஆலையாகும்.
ரூ.1000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலை மூலம் பத்தாண்டுகளில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆலையில் சேர்க்கப்படும் ஊழியர்களில் 80 சதவீதத்துக்கு மேல் பெண்கள். இதுவரை இந்த நிறுவனம் ரூ.175 கோடியை முதலீடு செய்துள்ளது. மேலும் ரூ.30 கோடி இந்தாண்டு முதலீடு செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.100 கோடி உற்பத்தி திறனை எட்டும் எனத் தெரிகிறது. உள்ளூர் மற்றும் வெளிநாடு மார்க்கெட் தேவையை இந்த ஆலை பூர்த்தி செய்யும்.
ஆலையின் தொடக்க விழாவில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, இசட்எப் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.3500 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 9000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுபோன்று மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி கூடுதலாக 8500 பேருக்கு அடுத்த பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம் என்று அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது என்றார்.
ஆர் அண்டு டி, ஆட்டோமொபைல், அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங் ஹப் போன்றவற்றுக்கு தமிழ்நாடு மிகவும் ஏற்ற இடமாகும். இந்தியாவின் பசுமை மற்றும் எலக்ட்ரிக் வாகன மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. நாம் இந்தியாவின் பவர்ஹவுஸை உருவாக்குகின்றோம். நாம் இந்தியாவின் உற்பத்தி எந்திரம்.
தமிழ்நாடு என்ற பிராண்டை முன்னிறுத்துவதில் கவனம் செலுத்தும் அரசு முதலீட்டாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து ஒவ்வொரு தனிப்பட்ட முதலீட்டையும் அதன் திட்டத்தைக் காட்டிலும் அதிக லாபத்தை தரும் வகையில் செயல்படும்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாநில அரசு திறன் வாய்ந்த திட்டங்களை தேனி அல்லது தூத்துக்குடியில் செயல்படுத்தும். ஏனென்றால் ஒரகடம் ஆலை போன்று அதிக மதிப்புள்ள வேலை நமக்குத் தேவை என்று அமைச்சர் ராஜா கூறினார்.
இசட்எப் நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியன் யூரோ விற்பனையை இந்தியாவில் இருந்து மேற்கொள்ள இலக்காக வைத்துள்ளது. அதன் வலுவான துறையான கமர்ஷியல் வாகனங்கள், பயணிகள் கார், எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.
இசட்எப் குரூப் இந்தியாவின் தலைவர் ஆகாஷ் பாஸி கூறுகையில், ஒரகடம் ஆலையில் 700 இன்ஜினியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். ஹைதராபாத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஆர் அண்டு டி மையமாக ஒரகடம் ஆலை விளங்கும்.
கோயம்புத்தூரில் உள்ள கம்பெனியின் ஆலையில் நெடுஞ்சாலைகளுக்குத் தேவையான டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் ஆக்ஸல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்படும். இதன் விரிவாக்கம் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
கோயம்புத்தூர் டிரான்மிஷன் சிஸ்டம்ஸ் ஹப்பாக உள்ளது. இதில் விண்டு மில்கள் உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்.
இந்திய சந்தையில் சப்ளை செய்வதற்கு நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க அரசுடன் இணைந்து செயல்படுகின்றோம் என்றார்.