ரூ.1.20 கோடி சும்மாவா கிடைக்குது!! அபராதம் கட்ட முரண்டு பிடிக்கும் இண்டிகோ… இந்த மாதிரி சம்பவம் இனி கூடாது!
பயணிகளை தரக்குறைவாக கவனித்துக் கொண்டதால், பிரபலமான இண்டிகோ (IndiGo) ஏர்லைன் நிறுவனத்துக்கும், மும்பை விமான நிலைய நிர்வாகத்துக்கும் அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த செய்தி சர்ச்சைக்கு உள்ளாகி வரும் நிலையில், அபராதத்துக்கு எதிராக இண்டிகோ ஏர்லைன் மேல்முறையீடு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் பனி பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் இரவு நேரங்களில் மிக அதிக பனி பொழிவு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், மற்ற பணிகளை போல் டெல்லியில் விமான போக்குவரத்தும் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களில், டெல்லிக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் பல மணிநேரம் தாமதமாகி உள்ளன.
அந்த வகையில், கடந்த ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று கடும் பனி பொழிவு காரணமாக வேறுவழியின்றி மும்பையில் தரையிறக்கப்பட்டது. விமான பயணங்களில் இவ்வாறு நடப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், விமானம் தரையிறக்கப்பட்ட பின் நடந்த விஷயங்கள் தான் இப்போதுவரையில் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.
அதாவது, மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த இண்டிகோ விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்படும் பயணிகளை விமான நிலையத்திற்குள் அழைத்து சென்று, நிலைமை சீரான பின்பு விமானம் இருக்கும் இடத்திற்கு மீண்டும் அழைத்து வருவது சம்பந்தப்பட்ட ஏர்லைன் நிறுவனத்தின் பொறுப்பு. ஆனால், ஜன.14ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல வாகனம் எதுவும் விமானம் நின்ற இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.
கோவாவில் இருந்து டெல்லிக்கு செல்ல வேண்டியவர்கள் சம்பந்தமே இல்லாமல், மும்பை விமான நிலையத்தின் ஓடுத்தள பாதையில் விமானத்திற்கு அருகே கால் வலிக்க நின்றிருந்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல், நிற்க முடியாமல் ரன்வே-இல் அமர்ந்துவிட்டனர். சிலர் விமானத்தின் ரன்வே-இல் அமர்ந்துக் கொண்டு உணவு உண்ணும் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் பார்த்திருப்பீர்கள்.
இந்த படங்களும், வீடியோக்களும் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தன. இண்டிகோ மற்றும் மும்பை விமான நிலைய நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய விமான துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூட காட்டமாக தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (BCAS) ரூ.1.20 கோடியை இண்டிகோ ஏர்லைன் நிறுவனத்துக்கு அதிரடியாக அபராதமாக விதித்துள்ளது.
ஆனால், இந்த அபராதத்தை தவிர்க்கும் வேலைகளில் ஏற்கனவே இண்டிகோ ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. “விசாரணையில் நிறுவனம் உள்ளது மற்றும் இது தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கான அதன் விருப்பத்தை மதிப்பீடு செய்யும்” என இண்டிகோ ஏர்லைனின் தாய் நிறுவனமான இண்டர்க்ளோப் அவியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.