பணத்தை ரெடி பண்ணுங்க.. பங்குச்சந்தையில் புதிய அலை வருகிறது..!!
ஹூண்டாய் இந்தியா சமீபத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல், இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய ஐபிஓ வெற்றி இந்தியாவில் செயல்படும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஐபிஓ வெளியிட வழிவகுக்கும் என்று வெளிநாட்டுப் பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான Jefferies கணித்துள்ளது.
இது இந்திய பங்குச்சந்தையின் முதல் ஐபிஓ அலையாக இருக்கும் என கணக்கிடப்படும் வேளையில் அடுத்த அலை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஐபிஓ மூலம் உருவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.. ஆனா எப்படி..? இந்திய பங்குச்சந்தை சுமார் 4 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ள நிலையில் அடுத்த அலை IPO உருவத்தில் வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில், இந்திய இணைய பொருளாதாரம் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய யூனிகார்ன் மையமாக உள்ளது.
இந்த யூனிகார்ன்கள் SAAS, e-commerce, fintech, gaming, edtech, D2C, logistics, mobility, Web3, healthtech போன்ற பல்வேறு துறைகளில் உருவாகியுள்ளது.
டாப் 100 யூனிகார்ன் நிறுவனங்கள் ஒன்றிணைந்து சுமார் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டை திரட்டியுள்ள இந்த நிறுவனங்கள், 350 பில்லியன் டாலர்களுக்கு அதிகமான மதிப்பீட்டை கொண்டுள்ளன.
இந்தியாவில் யூனிகார்ன் உருவாக்குதலின் வேகம், உலகின் பிற நாடுகளை விட மிக அதிகமாக உள்ளது. 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது, சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 2-3 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது.
Flipkart, Swiggy, Ola Electric, PhonePe போன்ற சில யூனிகார்ன் நிறுவனங்கள் விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இது அடுத்த 5-7 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாப வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவின் பங்குச்சந்தை வளர்ச்சியின் அடுத்தகட்டம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஐபிஓ வாயிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.