சளி , இருமலுக்கு இஞ்சி மரப்பா… வீட்டிலேயே செய்ய ரெசிபி..!
குளிர்காலத்தில் இயல்பாக ஏற்படக் கூடிய சளி, இருமல், கரகரப்பான தொண்டை போன்ற உபாதைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது அவசியம். இதற்கு பெரும்பாலும் நம் மக்கள் வீட்டுமுறை தீர்வுகளை பெறுவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றனர்.
அந்த வகையில் நம் பாரம்பரிய மருத்துவத்திலும் இடம்பெற்ற இஞ்சி மிட்டாய் நமக்கு நல்ல பலனை தரும். குறிப்பாக சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். நம் உடல் வெப்பத்தை அதிகரிக்கவும் இதை சாப்பிடலாம்.
இஞ்சி, வெல்லம், நெய், வறுத்த எள், மஞ்சள், கருமிளகு போன்றவற்றை சேர்த்து இஞ்சி மிட்டாயை நாமே தயார் செய்துவிட முடியும். கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்ற இஞ்சி மிட்டாய்களைக் காட்டிலும் நாமே தயார் செய்து சாப்பிடுகின்ற இஞ்சி மிட்டாய் மிகச் சிறப்பானதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 100 கிராம்
வெல்லம் – 200 கிராம்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன் அளவு
கருமிளகு – 6, 7 எண்ணிக்கையில் நுணுக்கியது
வறுத்த எள் – ஒரு கைப்பிடி
செய்முறை
இஞ்சியை நேரடியாக தீயில் வைத்து வாட்டவும். கரி பிடித்து விடாமல் அவ்வபோது திருப்பி விடவும்.
இஞ்சி தோல் நன்றாக நிறம் மாறும் வரை வாட்டிக் கொள்ளவும். வாட்டிய இஞ்சிய ஒரு கப் தண்ணீரில் போட்டு குளிர்விக்கவும். பின்னர் கத்தியை கொண்டு இஞ்சி தோலை உறிக்கவும். இஞ்சியை துண்டு, துண்டாக நறுக்கி, ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாய் எடுத்து அதில் நெய் விட்டு சூடேற்றவும். இதில் 200 கிராம் வெல்லம் சேர்த்து, மிதமான தீயில் உருக்கிக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நுணுக்கிய மிளகுத் தூள் சேர்க்கவும். இறுதியாக இஞ்சியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இந்தக் கலவை கெட்டியாக வரும் வரை வதக்கவும். இந்தக் கலவை ஆறிய பிறகு, எடுத்து உருட்ட வருகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். கைகளில் நெய் தடவிக் கொள்ளுங்கள். அதேபோல பிளேட்டிலும் நெய் தடவி வைக்கவும். உருட்டுகின்ற உருண்டையின் மேல் பகுதியில் வறுத்த எள் சேர்த்து உருட்டி, நெய்யுடன் வைக்கவும்.
எப்படி சாப்பிடுவது..?
இஞ்சி மிட்டாயை கடித்துச் சாப்பிடுவதைக் காட்டிலும், வாயில் கரைய வைத்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். தொண்டை கரகரப்பு பிரச்சனை உடனடியாக தீரும். அதேபோல அழற்சிக்கு எதிரான தன்மையும், ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகளும் கொண்டிருப்பதால் சீதோஷ்ண காய்ச்சலை தடுக்கலாம்.