ஞானவாபி மசூதி கட்டடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
ஞானவாபியின் மசூதி இருக்கும் இடத்தில் முன்பு இந்து கோயில் இருந்தது என்பதற்கான தடயங்கள் இருப்பதாக தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை அடுத்து, மசூதி கட்டடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி மசூதி கட்டமைக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே சிவன் கோவில் இருந்தது என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வு அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொல்லியல் துறையின் நிபுணர் குழு காசியில் ஞானவாபி விவகாரத்தை விசாரிக்கும் மாவட்ட நீதிபதியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஞானவாபி கட்டடத்தில் தொல்லியல் துறை சேகரித்த ஆதாரங்கள், ஒரு கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
“கட்டடத்தின் ஒரு பகுதி, குறிப்பாக மேற்கு சுவர் இந்து கோயிலின் மீதமுள்ள பகுதியாகும். ஏற்கெனவே இருந்த கோவிலின் தூண்கள் உள்ளிட்ட பகுதிகள் மசூதியின் விரிவுபடுத்தவும், சஹான் கட்டுவதற்கும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிக்கை நிரூபிக்கிறது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வசுகானா என்று அழைக்கப்படும் சிவலிங்கம் மசூதியின் தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. கட்டிடத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் ஜனார்த்தனன், ருத்ரா, உமேஸ்வரா உள்ளிட்ட பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இது ஒரு கோயில் என்பதற்குச் சான்றாகும்” எனவும் அலோக் கூறியுள்ளார்.
1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த வழிபாட்டுத் தலம் இந்து மதத்திற்கு உரியதாக இருந்தது என்பதையும், இப்போதும் அது இந்துக் கோயிலின் தன்மைகளைக் கொண்டுள்ளது என்பதையும் தொல்லியல் துறை சேகரித்துள்ள ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்கிறார் அலோக் குமார். இதனால், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 இன் 4வது பிரிவின்படி, இந்தக் கட்டிடத்தை இந்துக் கோயிலாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இத்துடன் மசூதியில் காணப்படும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய இந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஞானவாபி மசூதியை மரியாதையுடன் வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றிவிட்டு, காசி விஸ்வநாதரின் இடத்தை இந்து அமைப்பிடம் ஒப்படைக்கவும் மசூதி நிர்வாகக் கமிட்டிக்கு முன்வர வேண்டும் எனவும் கோரியுள்ளார். இரு சமூகங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளைப் பேண, இந்த நடவடிக்கை முக்கியமானது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் நம்புகிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.