நினைத்த காரியங்கள் தடங்கலின்றி நிறைவேற இந்த கோயிலுக்குச் செல்லுங்க!
மார்கழி மாதம் முழுவதும், சகல சைவ, வைணவ ஆலயங்களில், சூர்ய உதயத்திற்கு முன்னதாக, வழிபாடுகள் தொடங்கி விடும். மேள, தாள வாத்யங்கள் முழங்கும். பூலோக வைகுண்டமான, ஸ்ரீ ரங்கத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு, உலகறிந்ததே. இந்த சந்தர்ப்பத்தில், பெருமாள், வைகுண்ட வாசனாக இருந்து, அருள்பாலிக்கும் ஒருக்ஷேத்திரத்தைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல்லவர் மற்றும் சோழ மன்னர்களின் ஆட்சிக்கு முன்னரே இருந்ததாக வரலாற்றுச் சான்றுள்ள, பூமிநீளா உடனாய, வைகுண்டவாசப் பெருமாள் ஆலயம், வந்தவாசியிலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ள இளங்காடு எனும் இடத்தில் இருக்கின்றது. க்ஷேத்ர விசேஷமாக விளங்கும் இத்தலம், சுமார் 3000 ஆண்டுகளாக வழிபாட்டில் உள்ளதாம்.
அருகில் பூமிநீளா தாயார் வீற்றிருக்க,வைகுண்டவாசப் பெருமாள், அமர்ந்த கோலத்தில், சுமார் ஏழரை அடி உயரத்தில், பிருமாண்டமாக காட்சி தருகிறார். இத்தலம், திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அகோபில மடத்தின் 7வது பட்டம், ஜீயரான, மஹா தேசிகன் அவர்கள், இந்த ஊரில் பிறந்து, இத்தலப் பெருமாளை மங்களா சாசனம் செய்துள்ளார்கள்.
அப்போதிருந்த அரசர், இக்கோவில் நிர்வாகத்தையும், கோவில் முதல் மரியாதை போன்றவைகளை,செஞ்சி அரசவையில் ராஜகுருவாக இருந்த, சேஷாத்திரி ஆச்சாரியார் அவர்களிடம் ஒப்படைக்க, அவர், இங்கு அக்ரஹாரம் அமைத்துத் தனது வாரிசுகளை குடி அமர்த்த, இன்றளவும், அந்த பரம்பரையினரே ஆலய நிர்வாகம் செய்கின்றனர்.
இந்த ஊர், ஒரு காலத்தில் பெரியதொரு பிரசித்தி பெற்று விளங்கியதாகவும், இங்கு அக்ரஹாரத்தில், பெரிய பெரிய மஹான்கள் வாழ்ந்திருந்ததாகவும், அப்போதெல்லாம், இங்கு, வேத கோஷங்களும், யாக சப்தங்களும், கேட்டபடியே இருக்கும் நகரமாக இருந்தது என்கிறார்கள்.
ஒருகால பூஜை திட்டத்தின் கீழ், வைகானசம் ஆகம முறைப்படியான பூஜைகள் இங்கு நடக்கின்றது.இங்கு மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக திருவிழா கொண்டாட்டம் போல காணப்படும் ஒரு முக்கிய நிகழ்வு என்பர்.
இந்த ஆலயத்தில், பார் வேட்டை, தேசிகன் சாற்று முறை, நவராத்திரி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாதம் பாராயணம், கிருஷ்ண ஜெயந்தி போன்ற பல உற்சவங்கள் நடக்கின்றன. இத்தல பெருமாளை மனம் உருகி, மெய்யுணர்ந்து வழிபட, நினைத்த காரியங்கள் தடங்கலின்றி உடன் நிறைவேறும் என்பது மிகுந்த நம்பிக்கையாக இங்கு பரிமளிக்கிறது. இவ்வரிய ஆலயத்தை, நன்கு புனரமைத்து, காக்க வேண்டியது நம் கடமை.
நினைத்ததை நிறைவேற்ற அந்த வைகுண்டவாசப் பெருமாளை தினமும் வேண்டுவோம்.
“நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெஃகணைக்
கிடந்தது என்னிலாதமுன் எலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும்
கிடந்ததும் என் நெஞ்சுளே”
-திருமழிசையாழ்வார்.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார்,சென்னை.
தொடர்புக்கு: manivks47@gmail.com