தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தால் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது :
மதுரை மாநகர் மாவட்ட தெற்கு தொகுதி அ.தி.மு.க.சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் முக்கூரான் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட,பகுதி,வட்ட,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது-
முதலமைச்சர் சிறப்பான ஆட்சி மக்களுக்கு தரவில்லை. அவருடைய குடும்பத்திற்கு தான் தந்துள்ளார்.தி.மு.க.வின் மந்திரிகள் அனைவரும் சுகமாக உள்ளனர்.ஆனால் தி.மு.க.வின் தொண்டர்கள் மிகவும்சிரமப்பட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட வேண்டும் என்று எண்ணி வருகிறது தி.மு.க..ஆனால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்.வரும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தால் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் ஆண்டவனாலும்காப்பாற்ற முடியாது. இந்த ஆட்சியில் மருத்துவர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் போராட்டம் நடத்தாகஒரே குடும்பம் முதலமைச்சர் குடும்பம் மட்டுமே. தி.மு.க. அரசின் சாதனை பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தது மட்டுமே.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அரசுத் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது அதி.மு.க. அரசு மட்டுமே.நாள்தோறும் நாளிதழில் கஞ்சா கடத்தல் போதைக்கு அடிமையான இளைஞர்கள் மாணவர்கள் என அனைவரும் சீரழிந்து வருகின்றனர். இந்த ஆட்சியில் தி.மு.க.வின் கனிமொழி ஒரு சொட்டு மதுகூட இருக்காது என கூறினார் ஆனால் தற்சமயம் நிலைமை அப்படி இருக்கிறதா என்பதை தாங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.நமது ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு பல்வேறு இலவச திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தோம் ஆனால் இந்த தி.மு.க. அரசு மாணவர்களை கஞ்சா விற்க வைத்துவிட்டது என்பது மிகப்பெரிய வேதனை அளிக்கிறது.
தற்சமயம் மிகப்பெரிய போதை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.அனைத்து திட்டங்களுக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவருடைய அப்பாவான கலைஞர் பெயரை வைத்து வருகிறார்.திராவிட மாடல் என்று சொன்னால் கலைஞர் மட்டுமே அல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணாவின் பெயரை வைத்திருக்கலாம் அல்லவா.மதுரை மாவட்டத்தில் உருவாக்கியுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயரை வைப்பதை விட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைத்திருக்கலாம் அல்லவா.முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தமிழக மக்களின் நீர் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவிய பென்னிகுயிக்கின் சிலை லண்டனில் சேதமடைந்து இருப்பது மிகப்பெரிய வேதனையை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் கடனாளியாக மாற்றிய இந்த தி.மு.க. அரசுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் பேசினார்.