8 ஆண்டுகளில் 163% லாபம் தந்த தங்கப் பத்திரம்..!
பாதுகாப்பான அதே சமயம் லாபம் தரக்கூடிய முதலீடு திட்டங்களை தேடுபவர்களுக்கு தங்கப் பத்திரங்கள் சிறந்த முதலீடாக இருக்கும். ஏனெனில் தங்கப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு தங்கம் விலை உயர்வுக்கு ஏற்ப உயர்வதோடு, ஆண்டுக்கு 2.5% வட்டியையும் பெற்றுத் தருகிறது.
பாரம்பரிய தங்க முதலீடுகளில் இருந்து மக்கள் மாற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு தங்க பத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனை அடுத்து ஆண்டுக்கு 4 முறை தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தங்கப்பத்திரத்தின் முதல் பதிப்பு தற்போது முதிர்வடைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை பெற்று தந்துள்ளது.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் தங்கப்பத்திரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,600 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தங்கப் பத்திரங்களுக்கு 8 ஆண்டுகள் முதிர்வு காலம்.
தற்போது முதிர்வு காலம் முடிந்து கிராமுக்கு 2,600 ரூபாய்க்கு வாங்கப்பட்ட தங்கத்திற்கு கிராமுக்கு 6,271 ரூபாய் கிடைத்துள்ளது. அதாவது ஒரு கிராமிற்கு 163% லாபம் கிடைத்திருக்கிறது. XIRR எனப்படும் உள்வருவாய் விகிதம் என பார்த்தால் 13.6% வருவாய் கிடைத்துள்ளது.
உதாரணம்: கடந்த 2016ஆம் ஆண்டு தங்கப் பத்திரத்தின் முதல் பதிப்பில் ஒரு கிராம் 2,600 ரூபாய் என 26,000 ரூபாய்க்கு 10 கிராம் வாங்கி வைத்திருந்தால், 8 ஆண்டுகள் கழித்து உங்களின் 26,000 ரூபாய் முதலீடு 62,710ஆக உயர்ந்திருக்கும். இது மட்டுமின்றி ஆண்டுதோறும் உங்கள் முதலீட்டிற்கு 2.5% லாபமும் கிடைத்திருக்கும்
மற்ற முதலீடுகளை விட சிறந்ததா?: தங்கப் பத்திரங்களை பொறுத்துவரை மற்ற முதலீடுகளை விட சிறந்த லாபத்தை தந்துள்ளது என்கின்றனர் முதலீட்டாளர்கள். சந்தையில் அதிகமாக பேசப்படும் நிப்பான் இந்தியா ETF GOLD BEES நிதி திட்டத்தில் கடந்த 2016 பிப்ரவரி முதல் 2024 பிப்ரவரி வரையிலான 8 ஆண்டுகளில் CAGR எனப்படும் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 9.31% மட்டுமே.
இன்று முதல் தங்கப்பத்திரம் வாங்கலாம்: நடப்பாண்டில் தங்கப்பத்திரம் வெளியீடு இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 16ஆம் தேதி வரை தங்கப்பத்திரங்களை வாங்கி முதலீடு செய்யலாம்.
இந்த முறை தங்கப் பத்திரத்தில் ஒரு கிராமின் விலை ரூ.6,263 என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் வாயிலாக பெற விரும்புவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடியும் கிடைக்கும். இவர்கள் ரூ.6,213 என்ற விலையில் ஒரு கிராம் தங்கத்தை பெறலாம்.
தங்க பத்திரங்களில் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு 2.5 சதவீதம் என ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டியை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம். தங்கப் பத்திரத்தை பொறுத்துவரை லாக் இன் பீரியட் எனப்படும் காத்திருப்பு காலம் 8 ஆண்டுகள்.
அதாவது 8 ஆண்டுகள் கழித்து அன்றைய தேதியில் 24 காரட் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும்.
எப்படி வாங்குவது?: தங்கப் பத்திரத்தை வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் வாங்கலாம். மொபைல் பேங்கிங் மற்றும் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துவோர் ஆன்லைனிலேயே தள்ளுபடி விலையுடன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம். வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களுக்கு நேரில் செல்லும் போது ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
தங்கப் பத்திரத்தை தனிநபர்கள் 4 கிலோ வரையிலும், நிறுவனங்கள் மற்றும் டிரஸ்டுகள் பெயரில் வாங்குவோர் அதிகபட்சமாக 20 கிலோ வரையிலும் வாங்க இயலும். தங்கப் பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீட்டை கடனுக்கு பிணையாக காட்டலாம்.