தங்கம்.. மிக விலையுயர்ந்ததாக இருப்பது ஏன்? பின்னால் இருக்கும் பிரமிக்க வைக்கும் காரணங்கள் இதுதான்

சென்னை: பண்டிகை காலங்கள் என்றாலே நகைகள்தான் உடனடியாக நினைவுக்கு வரும். அதிலும் தங்கம் என்றால் அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கும்.
ஆனால் விலையே விண்ணை முட்டுகிறது. தங்கத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு விலை? அப்படி என்ன இருக்கிறது தங்கத்தில்? அது எப்படி உருவாகிறது? என்பதை குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
வரலாறு முழுவதும் சுமார் 1,90,000 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு தங்கம் 1950 முதல் வெட்டியெடுக்கப்பட்டது. தங்கம் அழிக்க முடியாதது என்பதால் இந்த உலோகம் அனைத்தும் இன்னும் பயன்பாட்டில்தான் இருக்கிறது. சிம்பிளாக சொல்வதெனில் தங்கம் இந்த பூமியில் கிடைப்பது அரிது. எனவேதான் இதற்கான விலையும் அதிகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் இதற்கு பின்னால் பெரும் உண்மைகள் இருக்கின்றன. இதனைதான் x சோஷியல் மீடியாவில் @chockshandle என்பவர் விளக்கி இருக்கிறார். அவர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
“பிரபஞ்ச நட்சத்திரங்களை இயக்குவது அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) ஆகும். பிரபஞ்சம் தோன்றிய போது இரு வகை அணுவான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் உருவாகியிருந்தன. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன. ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ‘சூப்பர்நோவா’ என்ற நட்சத்திர வெடிப்பின் வினையால் கிடைப்பது தான் தங்கம் (மற்றும் பிற உலோகங்கள்) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தங்கம் வேதியியல்
மஞ்சள் நிறமுள்ள தங்கம் Au (அணு எண் 79) என்ற குறியீட்டினை பெற்றது. தங்கம் தண்ணீரை விட 19 மடங்கு கனமாகவும், தாமிரம் தண்ணீரை விட 9 மடங்கு கனமாகவும் இருக்கும். தங்கம் மற்றும் தாமிரம் உலோகங்கள் கலவையாக கலக்கப்படும் போது தண்ணீரை விட 15 மடங்கு கனமாக இருக்கும்.
செய்கூலி – சேதாரம்
24 காரட் சுத்தமான தங்கத்திற்கு நெகிழும் தன்மை அதிகம் என்பதால் 24 காரட்டில் தங்க நகைகளை செய்ய முடியாது. எனவே தங்க நகைகள் எளிதில் உடையாமல் இருக்க 8.4% பிற உலோகமான செம்பு (பெரும்பாலும்), வெள்ளி, பல்லேடியம், காட்மியம் கலப்பதுண்டு. கலக்கப்படும் உலோகத்திற்கும் சேர்த்தே “செய்கூலி – சேதாரம்” கொடுத்து நாம் தங்க நகைகளை வாங்குகிறோம். பிற உலோகமும் சேர்க்கப்பட்டு செய்யப்படும் தங்க நகைகளில் உள்ள தங்கத்தின் அளவு (விழுக்காடு) கேரட் அளவில் மதிப்பிடப்படும். இந்தியாவில் உள்ள தங்க நகைகள் 22 கேரட் வகையை சேர்ந்தது.
கே.டி.எம் / ஹால்மார்க்
வரலாற்று ரீதியாக 60% தங்கம் மற்றும் 40% செம்பு ஆகியவற்றின் கலவையாக தங்க நகைகள் இருந்தது. இதில் தங்கத்தின் தூய்மை மிக குறைவாக இருந்தது. அதனால் ஆரம்ப காலங்களில் 92% தங்கம் மற்றும் 8% காட்மியம் கலவையாக தங்க நகைகள் சாலிடரிங் செய்யப்பட்டு வந்தன.